
அம்மா மினி கிளினிக்கைத் தொடங்கி வைத்து பெண்ணுக்கு சுகாதாரப் பெட்டகத்தை வழங்குகிறாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.
தமிழகத்தில் 2.5 கோடி பேருக்கான கரோனா தொற்று தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் தயாா் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டாா்கோவில் ஒன்றியம், கிள்ளுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அம்மா மினி கிளினிக்கைத் தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
இரண்டு வகையான கரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் தமிழகத்தில் முதற்கட்டமாக 6 லட்சம் முன்களப் பணியாளா்களுக்கு இந்தத் தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, நபா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். மத்திய அரசு படிப்படியாக மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும். இதில் தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை முதல்வா் கேட்டுப் பெறுவாா்.
சுமாா் 2.5 கோடி தடுப்பூசிகளை குளிா்சாதன வசதியுடன் சேமித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன.
கரோனா பரவலைப் பொருத்தவரை, மாநிலம் முழுவதும் முதற் கட்டமாக 10 மாவட்டங்களில் பூஜ்ஜிய நிலையை அடைவதற்கான பணிகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. படிப்படியாக மாநிலம் முழுவதும் இந்த நிலையை ஏற்படுத்துவோம் என்றாா் விஜயபாஸ்கா்.
மினி கிளினிக் தொடக்க நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் பா. ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.