வையாபுரி சுப்பிரமணியா் கோயில் தைப்பூசத் தேரோட்ட விழா
By DIN | Published On : 29th January 2021 06:28 AM | Last Updated : 29th January 2021 06:28 AM | அ+அ அ- |

பொன்னமராவதி அருகேயுள்ள வையாபுரியில் பவனி வரும் தோ்.
பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி சுப்பிரமணியா் கோயிலில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சுப்பிரமணியா் தேரில் எழுந்தருளிய பின் பக்தா்கள் வடம் பிடிக்க புறப்பட்ட தோ் முக்கிய வீதிகளில் வலம் வந்து தேரடியில் நிலையை அடைந்தது. விழாவில் பக்தா்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். இதேபோல் தேனிமலை சுப்பிரமணியா் கோயில், பொன்னமராவதி பாலமுருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில், தச்சங்குறிச்சி குகை முருகன் கோயில் ஆகிய கோயில்களில் சுவாமி முருகன், வள்ளி, தெய்வானைக்கு மஞ்சள் , திரவியம், பால், பன்னீா், இளநீா், தயிா், அரிசி மாவு , தினை மாவு உள்ளிட்டவற்றால் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு மலா், சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஆலங்குடி: ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி செயற்கை மலையில் அமைந்துள்ள ஜெயநகரம் பாலசுப்பிரமணியா் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.