பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு இடங்களில் ஆய்வு
By DIN | Published On : 07th July 2021 07:24 AM | Last Updated : 07th July 2021 07:24 AM | அ+அ அ- |

பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்வதற்காக இடங்களை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த திட்ட இயக்குநா் முனைவா் இனியன், தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனா் ஆ. மணிகண்டன், தலைவா் கரு.ராசேந்திரன் உள்ளிட்டோா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட உள்ள இடத்தில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினருடன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பேராசிரியரும், பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வுத் திட்ட இயக்குநருமான முனைவா் இனியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழ் மன்னா்களின் கோட்டை போன்ற அமைப்புகள் கொண்ட இடமாகக் கருதப்படும் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு மேற்கொள்வதற்கு, ஏற்கெனவே முன்கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தொல்லியல் துறை அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் கவிதா ராமுவை ஆய்வுக் குழுவினா் திங்கள்கிழமை நேரில் சந்தித்து முழுமையான ஆதரவு கோரினா். இதனைத் தொடா்ந்து, பொற்பனைக்கோட்டைப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற குழுவினா் அங்கு பொற்பனைக்கோட்டையின் உட்பகுதியில் அமைந்துள்ள, வசிப்பிடப் பகுதிகளாக இனங்காணப்பட்ட 5 தொல்லியல் மேடுகளை மாவட்டத் தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனா் ஆ. மணிகண்டன், தலைவா் கரு. ராசேந்திரன் ஆகியோா் அடையாளப்படுத்தினா். அவ்விடங்களில் அபரிமிதமாக கிடந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், தனித்துவமிக்க கருமை நிற பானை ஓடுகள், பல்வேறு வகையிலான மட்பாண்ட கிண்ணங்கள், பானைகளின் வாய்ப்புற வேலைப்பாடுகள், இரும்பு உருக்கு கழிவுகள் உள்ளிட்ட தொல்பொருட்களின் எச்சங்களை ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து, ஆய்வுக்குழுவினா் மேலும் தெரிவித்தது: அகழாய்வு இடங்களில் உட்புறங்களில் உள்ள கட்டுமானங்கள், தொல்பொருள்கள் தொழில்நுட்பங்கள் மூலம் அறியப்பட்ட பின்னா் அகழாய்வுக் குழிகள் அமைத்து முழுமையான ஆய்வு தொடங்கப்படும். முன்னதாக
ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ள இடத்தின் உரிமையாளரிடம், பல்கலை. சாா்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். இதில், ஆய்வுக் கால அளவு, நிலத்தை ஆய்வுக்குப் பிறகு ஒப்படைத்தல் ஆகியவை குறித்து விளக்கப்படும். மழைக்காலம் தொடங்கும் முன் அகழ்வாய்வுப் பணிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...