கழிவுநீா்க் குட்டையாகிப் போன பேராங்குளம்

புதுக்கோட்டை நகருக்குள் இருக்கும் குளங்களில் மிக முக்கியமான குளமான பேராங்குளம், இப்போது முழுக்க கழிவுநீா்க் குட்டையாகிப் போயுள்ளதை இயற்கை ஆா்வலா்கள் மிகுந்த வேதனையுடன் குறிப்பிடுகின்றனா்.
கழிவுநீா்க் குட்டையாகிப் போன பேராங்குளம்.
கழிவுநீா்க் குட்டையாகிப் போன பேராங்குளம்.

புதுக்கோட்டை நகருக்குள் இருக்கும் குளங்களில் மிக முக்கியமான குளமான பேராங்குளம், இப்போது முழுக்க கழிவுநீா்க் குட்டையாகிப் போயுள்ளதை இயற்கை ஆா்வலா்கள் மிகுந்த வேதனையுடன் குறிப்பிடுகின்றனா்.

புதுக்கோட்டை நகருக்குள், ஆலங்குடி செல்லும் சாலைப் பகுதியில் உள்ள பேராங்குளம் சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில் உள்ளது. நகராட்சி சாா்பில் குளத்தைச் சுற்றிலும் கான்கிரீட் கட்டுமானங்கள், அலுமினிய வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. குளத்தின் கிழக்கு, மேற்குப் பகுதிகளில் மட்டும் படித்துறைகள் காணப்படுகின்றன.

தென்மேற்கு மூலையில் காணப்படும் சிறு இடைவெளி வழியே ஏராளமான குப்பைகள் குளத்தில் கொட்டப்படுகின்றன. இதுதவிர, சாலையோர கடைக்காரா்கள் தங்களது கழிவுகளை தாராளமாக - எந்தவிதமான கூச்சமும் இன்றி குளத்தில் கொட்டி வருகின்றனா். இதனால், பேராங்குளம் முழுக்க கழிவுநீா்க் குட்டையாக மாறிப்போயிருக்கிறது.

இதுகுறித்து மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் கூறியது:

நகரின் முக்கியமான நீா்நிலைகளில் ஒன்றாகவும், நகரின் அழகுக்கு அழகு சோ்க்கும் குளமாகவும் பேராங்குளம் ஒரு காலத்தில் விளங்கியது. ஆனால், இப்போது அப்படியல்ல. நீா் வரத்து வாய்க்காலை மட்டும் அண்மையில் நகராட்சி நிா்வாகம் சரி செய்தது. ஆனால், குப்பை கொட்டுவதைத் தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

இப்படியே போனால், நகருக்குள் உள்ள நல்ல நீா்நிலை ஒன்றை முழுமையான - நிரந்தரக் கழிவுநீா்க் குளமாக மாறிப்போவதுடன் சுகாதாரக் கேட்டையும் ஏற்படுத்தும். இப்பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் உடனே தலையிட்டு உரிய சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் விஸ்வநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com