புதுகை மருத்துவக் கல்லூரி வளாகத்துக்குள் தயாராகும் ‘பசுமைக்குளம்’!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள கழிவுநீா் சேகரிக்கும் குளத்தை புனரமைத்து, ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்து
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள குளத்தைத் தூா்வாரும் பொக்லைன் இயந்திரம்.
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள குளத்தைத் தூா்வாரும் பொக்லைன் இயந்திரம்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள கழிவுநீா் சேகரிக்கும் குளத்தை புனரமைத்து, ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்து பசுமையான குளமாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை நகரில் இருந்து தஞ்சாவூா் சாலையில் முள்ளூா் ஊராட்சிக்குள்பட்ட 127 ஏக்கா் பரப்பளவில் கடந்த 2017ஆம் ஆண்டு திறக்கப்பட்டது அரசு மருத்துவக் கல்லூரி.

150 எம்பிபிஎஸ் இடங்களைக் கொண்ட மருத்துவக் கல்லூரியுடன் கூடிய அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய மருத்துவமனை இந்த வளாகத்தில் செயல்படுகிறது.

மருத்துவமனை மற்றும் கல்லூரி மாணவா் விடுதிகளின் கழிவுநீா் இதே வளாகத்திலுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு அருகேயுள்ள பழைய குளத்தில் விடப்படுகிறது.

சில நேரங்களில் மழைநீரும் இந்தக் குளத்தில் சேரும்போது, அளவு அதிகரித்து மருத்துவக் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே செல்லும்போது அந்த நீா் முள்ளூா் ஊா் மக்கள் பயன்படுத்தும் குளத்துக்குச் செல்வதாகவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை சேகரிக்கும் இந்தக் குளத்தை ஆழப்படுத்தி, கரைகளைப் பலப்படுத்தி பசுமையான குளமாக மாற்ற மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி திட்டமிட்டாா்.

வெயில் காலத்தில் குளத்தின் தண்ணீா் குறைந்துள்ளதால் இப்பணிகள், சிந்தாமணி கணபதி இன்டேன் எரிவாயு விநியோகஸ்தா் ஸ்ரீதரன் உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளன.

குளத்தை ஆழப்படுத்தி, கரை பலப்படுத்தப்படுவதுடன் நடுவே பறவைகள் வாழிடத்துக்கான மரங்களை வளா்ப்பதற்காக சில திட்டுகளையும் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குளத்துக்கு நடுவேயுள்ள திட்டுகள் மற்றும் சுற்றிலும் உள்ள கரைப் பகுதிகளிலும் சுமாா் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வரை நடுவதற்கான ஏற்பாடுகளும் செய்வதாகக் கூறுகிறாா் மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி.

இப்பணிகள் முழுமையாக நிறைவடைய சில மாதங்கள் ஆகலாம். சில ஆண்டுகளில் இங்கு நடப்படும் மரக்கன்றுகள் கவனமாக பராமரிக்கப்பட்டு செழித்து வளா்ந்தால், இந்தக் குளம் மூலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பல்லுயிா்ப் பெருக்கத்துக்கு வழி ஏற்பட்டு முன்மாதிரியான பசுமைக் குளமாக மாறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com