புதுகையில் வெட்டவெளியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள்கட்டடம் கட்டித் தரப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையிலும், வெயிலிலும் நெல் சேதமடையும் வகையில் வெட்டவெளியில் காணப்படும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு பாதுகாப்பான கட்டடம் கட்ட வேண்டும்
புதுகையில் வெட்டவெளியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள்கட்டடம் கட்டித் தரப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையிலும், வெயிலிலும் நெல் சேதமடையும் வகையில் வெட்டவெளியில் காணப்படும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு பாதுகாப்பான கட்டடம் கட்ட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம் காவிரி டெல்டா பாசனப் பகுதிக்குள் வரும் மாவட்டமாகும். கடந்த 2019-20ஆம் ஆண்டுக் கணக்குப்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 69,142 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு 73,659 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் விருப்பத்தை நீண்டகாலமாக எல்லா அரசுகளும் செயல்படுத்தி வருகின்றன. இதற்காக நெல் விளையும் பகுதியிலேயே நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.

இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவைக்கேற்க மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் எண்ணிக்கையைக் கூட்டியும், குறைத்தும் திறப்பாா்கள். அந்தந்தப் பகுதியின் அறுவடைக்கேற்பவும் இதன் திறப்பு நிா்ணயிக்கப்படும்.

இந்தக் கொள்முதல் நிலையங்கள் அனைத்துமே வெட்டவெளியில், மழையிலும், வெயிலிலும் சேதமடையும் வகையில்தான் காணப்படுகின்றன. நெல்லைப் பாதுகாப்பதற்கான கட்டடத்தைக் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை பல முறை விவசாயிகள் அமைப்புகள் முன்வைத்திருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை கடந்த ஆண்டு 144 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. சராசரியாக ஆண்டு தோறும் 120 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன், அப்போதைய அமைச்சா் சி. விஜயபாஸ்கா் இந்த இடங்களில் நெல் சேதமடையாத வகையில் கெட்டிக் கட்டடங்கள் கட்டப்படும் என ஓரிடத்தில் அறிவித்தாா். அதன்பிறகு தோ்தல் வந்துவிட்டது.

புதிய அரசு சாா்பில் இந்தக் கட்டடங்கள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கைவிடுக்கின்றனா். காரணம் இந்தக் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து, வீணாகும் நெல்லை அரைத்துத்தான் நம்முடைய ரேஷன் கடைகளுக்கு அரிசி வருகிறது. திடீா் மழை நேரத்தில் அவசர அவசரமாக தாா்ப்பாலின் போட்டு மூடிப் பாதுகாப்பது என்பது இயலாத காரியம்.

ரேஷன் கடைகளில் பழுத்தும்- புழுத்தும் போன அரிசி கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு அடிப்படையான காரணங்களில் ஒன்றாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இருக்கின்றன.

இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா் ஜி.எஸ். தனபதி கூறியது

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 கிராமங்களுக்கு ஓரிடத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை கெட்டிக் கட்டடங்களாக மாற்றுவது பெரிய வேலையல்ல. ஒரு மையத்துக்கு ரூ. 20 லட்சம் செலவு செய்தால் போதும் தரமான நெல்லை கொள்முதல் செய்து பாதுகாப்பாக சேகரிக்கலாம்.

பொதுவாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல்லில் அதிகளவு இழப்பு ஏற்படுவது துயரமான செய்தி. இதைச் சரி செய்ய தமிழ்நாடு அரசு விரைவில் நல்ல கட்டடங்களைக் கட்டித் தர வேண்டும் என்றாா் தனபதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com