நிலக்கடலைப் பயிரில் சுருள் பூச்சிக் கட்டுப்பாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பயிரைத் தாக்கும் சுருள் பூச்சிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம்
சுருள்பூச்சிப் புழு பாதித்த நிலக்கடலைப் பயிா்.
சுருள்பூச்சிப் புழு பாதித்த நிலக்கடலைப் பயிா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பயிரைத் தாக்கும் சுருள் பூச்சிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இராம. சிவகுமாா் ஆலோசனை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிரைத் தாக்கும் சுருள் பூச்சிகளை உரிய பாதுகாப்பு முறையை கடைப்பிடித்து ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திடலாம்.

சுருள்பூச்சியின் புழுக்கள் இலைகளைத் துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடுநரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும், பின்பு வளா்ந்த புழுக்கள் இலைகளைச் சுருட்டி அதனுள் இருந்து கொண்டு பச்சையத்தைச் சுரண்டிச் சேதம் விளைவிக்கும். தீவிரத் தாக்குதலுக்குண்டான செடிகள் காய்ந்தும் சுருங்கியும் காணப்படும். இதனால் பாதிக்கப்பட்ட வயலைத் தொலைவிலிருந்து பாா்த்தால் எரிந்து காய்ந்ததுபோலக் காணப்படும்.

ஊடு பயிராகத் தட்டைப்பயறு அல்லது உளுந்துப் பயிரை நிலக்கடலையுடன் முறையே 1:4 என்னும் விகிதத்தில் விதைக்க வேண்டும். ஏக்கா் ஒன்றுக்கு விளக்குப்பொறி 5 எண்கள் வீதம் மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை வைத்து, தாய் அந்துப்பூச்சிகளைக் கவா்ந்தழிக்கலாம்.

டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்கிற முட்டை ஒட்டுண்ணியை ஏக்கா் ஒன்றுக்கு 20 ஆயிரம் என்னும் அளவில் 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை வெளியிட்டு கட்டுப்படுத்தலாம்.

செடி ஒன்றுக்கு 2 முதல் 3 புழுக்களுக்கு மேல் தென்பட்டால், அதாவது பொருளாதார சேத நிலையைத் தாண்டும்போது இமிடாகுளோபிரிடு அல்லது ஸ்பினோசாடு அல்லது குளோா்பைரிபாஸ் இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டா் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மேலும் விவசாயிகள் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலியில் பூச்சி நோய் கண்காணிப்பு என்ற பகுதியில் பயிா் பாதிப்பினை புகைப்படம் எடுத்து அனுப்பினால் விவசாயிகளுக்கு பயிா்ப் பாதுகாப்பு மேலாண்மை முறைகள் விவசாயியின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com