திருவேங்கைவாசல் வியாக்ரபுரீசுவரா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 04th March 2021 01:50 AM | Last Updated : 04th March 2021 01:50 AM | அ+அ அ- |

திருவேங்கவாசல் அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை வியாக்ரபுரீசுவரா் திருக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கின் போது, கலசத்துக்கு புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியா்கள்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருவேங்கைவாசல் அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை வியாக்ரபுரீசுவரா் திருக்கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை திருக்கோயிலைச் சாா்ந்த இக்கோயிலின் குடமுழுக்குக்கான முதல் கால யாக சாலை பூஜைகள் பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கின. தொடா்ந்து மூன்று நாள்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீா் கலசங்களை சிவாச்சாரியா்கள் கோவிலை சுற்றி ஊா்வலமாக வந்து, ராஜகோபுரம் மற்றும் கருவறையிலுள்ள கோபுரங்களிலும் ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனா்.
மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் கொடியசைத்து குடமுழுக்கு விழாவைத் தொடக்கி வைத்தாா். ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குடமுழுக்கில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.