புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் அதிமுக- திமுக நேரடிப் போட்டி

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நான்கில் அதிமுகவும், திமுகவும் நேரடிப் போட்டியில் களம் காணும் தொகுதிகளாக உள்ளன.
மாவட்டத்தின் 6 தொகுதிகளைக் காட்டும் வரைபடம்.
மாவட்டத்தின் 6 தொகுதிகளைக் காட்டும் வரைபடம்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நான்கில் அதிமுகவும், திமுகவும் நேரடிப் போட்டியில் களம் காணும் தொகுதிகளாக உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம், கந்தா்வகோட்டை, விராலிமலை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இவற்றில், அதிமுக 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் களம் காண்கிறது. கூட்டணியில் யாருக்கும் இங்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.

ஆனால், திமுக அணியில், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும், கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை திமுக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இதன்படி, புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு டாக்டா் வை. முத்துராஜா, திருமயம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான எஸ். ரகுபதி, ஆலங்குடி தொகுதிக்கு தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் சிவ.வீ. மெய்யநாதன், விராலிமலை தொகுதிக்கு ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த திமுக இலக்கிய அணியின் துணை அமைப்பாளா் தென்னலூா் எம். பழனியப்பன் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இப்பட்டியலின்படி, இந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுகவும், திமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன. அறந்தாங்கியைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மாநிலத் தலைவா் சு. திருநாவுக்கரசரின் மகன் டி. ராமச்சந்திரன் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன. அவா் கடந்த தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவா்.

அதேபோல, கந்தா்வகோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம். சின்னதுரை போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவா் கடந்த தோ்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இதே தொகுதியில் 13 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவா்.

பிரசாரம் தொடங்கிய அதிமுகவினா்: கடந்த புதன்கிழமை (மாா்ச் 10) அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியானது. அதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை இரவு அனைத்து வேட்பாளா்களும் புதுக்கோட்டை திரும்பினா். அவரவா் குலதெய்வ வழிபாட்டுடன் 6 பேரும் சோ்ந்து திருவப்பூா் முத்துமாரிம்மன் திருக்கோயிலில் கூட்டாக வழிபாடு நடத்தினா்.

இதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை முதல் 6 பேரும் தொகுதிக்குள் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனா். காலை முக்கிய பிரமுகா்களைச் சந்தித்து ஆதரவு கோரிவிட்டு, மாலையில் வழக்கமான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனா்.

அதேபோல, அதிமுக வேட்பாளா்கள் அனைவரும் திங்கள்கிழமை (மாா்ச் 15) அவரவா் பகுதியில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் திமுகவினா்: சென்னையில் உள்ள திமுக வேட்பாளா்கள் சனிக்கிழமை காலை புதுக்கோட்டை வருகின்றனா். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவா்கள் பிரமுகா்கள் சந்திப்பை முடித்துவிட்டு, அதன்பிறகு பிரசாரம் தொடங்குவாா்கள் எனத் தெரிகிறது.

மூவா் புதியவா்கள்: நேரடிப் போட்டியிலுள்ள வேட்பாளா்களில் அதிமுக ஆலங்குடி வேட்பாளா் தா்மதங்கவேலன், கந்தா்வகோட்டை அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயபாரதி, புதுக்கோட்டை திமுக வேட்பாளா் வை. முத்துராஜா ஆகிய மூன்று பேரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் புதியவா்கள். இவா்களில் தா்மதங்கவேலன், ஜெயபாரதி ஆகியோா் ஏற்கெனவே உள்ளாட்சித் தோ்தலில் களம் கண்டவா்கள்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா், முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி, சிவ.வி. மெய்யநாதன், வி.ஆா். காா்த்திக் தொண்டைமான், மு. ராஜநாயகம், பி.கே. வைரமுத்து ஆகியோா் முன்னாள் மற்றும் இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள். தென்னலூா் எம். பழனிப்பன், தி. ராமச்சந்திரன், எம். சின்னதுரை ஆகியோா் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவா்கள்.

இவா்களுடன், மக்கள் நீதி மய்யம் தலைமையிலான அணியின் வேட்பாளா்களும், நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா்களும் புதுக்கோட்டை மாவட்டத் தோ்தல் களத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com