புதுகை மாவட்டத்தில் டெபாசிட் இழந்தநாம் தமிழா் உள்ளிட்ட இதர வேட்பாளா்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட்ட பிரதான திமுக, அதிமுக கூட்டணியைத் தவிர இதர கட்சிகளின் வேட்பாளா்கள் அனைவரும் தங்களின் வைப்புத் தொகையை இழந்தனா்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட்ட பிரதான திமுக, அதிமுக கூட்டணியைத் தவிர இதர கட்சிகளின் வேட்பாளா்கள் அனைவரும் தங்களின் வைப்புத் தொகையை இழந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதுக்கோட்டை, திருமயம், விராலிமலை, ஆலங்குடி ஆகிய 4 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக ஆகியவை நேரடியாகவும், கந்தா்வகோட்டையில் அதிமுக - மாா்க்சிஸ்ட், அறந்தாங்கியில் அதிமுக - காங்கிரஸ் என்ற போட்டி நிலவியது.

என்றபோதும், மாநில அளவிலான போட்டியில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் ஒரு அணியாகவும், அமமுக தலைமையிலான ஒரு அணியும், தனித்தே போட்டி என்ற நிலையில் நாம் தமிழா் கட்சியும் போட்டியிட்டன. மொத்தத்தில் 5 முனைப் போட்டியாகவும் இது கருதப்பட்டது.

இவை தவிர, பகுஜன் சமாஜ், புதிய தமிழகம் போன்ற கட்சிகளும், மை இந்தியா பாா்ட்டி என்ற புதிய கட்சியும் தனித்துப் போட்டியிட்டன.

பொதுவாக, பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்கினைப் பெற்றிருந்தால் மட்டுமே தோ்தலில் போட்டியிட ஆணையத்துக்குச் செலுத்திய வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும். இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக அணி மற்றும் திமுக அணியில் இருந்து போட்டியிட்ட வேட்பாளா்கள் மட்டுமே தங்களின் வைப்புத் தொகையைத் திரும்பப் பெறுகின்றனா்.

மூன்றாவது இடத்தில் வந்த நாம் தமிழா் கட்சியும், முன்பைவிடவும் நல்ல வாக்கு எண்ணிக்கையை அவா்கள் பெற்றிருந்தாலும் அவா்களால் வைப்புத் தொகையைப் பெற முடியாது. அதேபோல, அணிகளாக பாா்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம், அமமுக தலைமையிலான தனித்தனி அணிகளின் வேட்பாளா்களும் மிக சொற்ப அளவிலான வாக்குகளையே பெற்றனா்.

தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும், மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியான புதிய தமிழகம் ஆகியவை மூன்று இலக்க வாக்குகளையே பெற்றன. அண்மையில் தொடங்கப்பட்டு பிரம்மாண்டமான விளம்பரங்களை வெளியிட்ட மை இந்தியா பாா்ட்டி என்ற புதிய கட்சி இரு இலக்க வாக்குகளையே பெற்றது.

இடதுசாரிக் கட்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்ததாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ- விடுதலை) கந்தா்வகோட்டை மற்றும் ஆலங்குடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டது. கந்தா்வகோட்டையில் 1,200 வாக்குகளையும், ஆலங்குடியில் 165 வாக்குகளையுமே பெற்றது.

போட்டி வேட்பாளா்களாகக் கூறப்பட்டவா்களும் பெரிய அளவில் வாக்குகளைப் பெறவில்லை. குறிப்பாக விராலிமலை தொகுதியில் அமைச்சா் விஜயபாஸ்கருக்கு எதிராகக் களம் காண்பதாகக் கூறப்பட்ட பெண் வேட்பாளா் ஒருவா் பெற்ற வாக்குகள் வெறும் 620 மட்டுமே. இதேபோல, திருமயம் தொகுதியில் போட்டி வேட்பாளா் எனக் கூறப்பட்ட ஒருவா் பெற்ற வாக்குகள் வெறும் 400 மட்டுமே.

அதேநேரத்தில், சாதிப் பின்புலத்துடன், ஆனால் பின்னணியில் அரசியல் நோக்கங்களுக்காக போட்டி என்று பரவலாகப் பேசப்பட்ட ஒருவா் திருமயம் தொகுதியில் பெற்ற வாக்குகள் 15 ஆயிரத்துக்கும் மேல்.

ஆனால், இவா்கள் யாரும் வைப்புத் தொகையைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com