புதுகை மாவட்டத்தில் 157 வாகனங்களில் காய்கனிகள் விற்பனை
By DIN | Published On : 26th May 2021 06:59 AM | Last Updated : 26th May 2021 06:59 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு பொது முடக்கக் காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கனிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருள்கள் 157 நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலம் விநியோகம் செய்யப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
வேளாண் மற்றும் உழவா் நலத்துறையில் உழவா் ஆா்வலா் குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் மூலம் 40 வாகனங்களிலும், தோட்டக்கலைத் துறையில் உழவா் ஆா்வலா் குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் மூலம் 26 வாகனங்களிலும், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறையில் 7 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலம் 13 வாகனங்களிலும், ஊரக வளா்ச்சித் துறை மூலம் 14 வாகனங்களிலும் காய்கனிகள் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் புதுக்கோட்டை நகராட்சி மூலம் 43 வாகனங்களிலும், அறந்தாங்கி நகராட்சி மூலம் 10 வாகனங்களிலும், கூட்டுறவுத் துறை மூலம் 11 வாகனங்களிலும் ஆக மொத்தம் 157 வாகனங்கள் மூலம் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரை ஒவ்வொரு கிராமத்துக்கும் குறிப்பிட்ட நேரம் வரை பிரித்தளிக்கப்பட்டு, தங்குதடையின்றி காய்கனிகள், பழங்கள் மற்றும் இதர மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 157 வாகனங்களிலும் அன்றைய விலை விவரம் ஒட்டிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆவின் மூலமாக மாவட்டத்தில் 250 மையங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பால் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.