கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்: மீனவர்கள் சாலை மறியல்

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களின் படகை இடித்து நடுக்கடலில் மூழ்கடித்த செயலைக் கண்டித்து கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களின் படகை இடித்து நடுக்கடலில் மூழ்கடித்த செயலைக் கண்டித்து கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 118 விசைப்படகுகளில் மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 

அதில், எஸ். சவுந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ் மகன் ராஜ்கிரண் (30), சுதாகர் மகன் சுகந்தன் (30), அருளானந்தன் மகன் சேவியர்(32) ஆகிய 3 பேரும் சுமார் 17 நாட்டிக்கல் மைல் தொலைவில் செவ்வாய்க்கிழமை காலை மீன்பிடித்தனர். 

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தங்களது ரோந்து படகு மூலம் மீனவர்களின் படகு மீது இடித்ததாக கூறப்படுகிறது. 

அதில், படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, 3 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். இவர்களில் சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு, காங்கேசன்துறை கடற்படை தளத்தில் ஒப்படைத்தனர்.

மாயமான ராஜ்கிரணை தேடும்பணியை இலங்கைக் கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து  கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மீன்வளத்துறை, வருவாய்த் துறையினர் மற்றும் காவலர்கள் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் இலங்கைக்  கடற்படையினரின் செயல் கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் இருவரையும் விரைந்து தமிழகத்துக்கு அழைத்து வரவேண்டும். மாயமான மீனவரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

தொடரும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com