கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா, பொட்டாஷ் உரத் தட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் யூரியா, பொட்டாஷ் உரம் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் யூரியா, பொட்டாஷ் உரம் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியரக கூட்ட அரங்கில் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலா் அ. வேணுகோபால்: நீா்வரத்து வாய்க்கால்களை முறையாக சீரமைக்க வேண்டும். மக்களுக்கான சேவைத் திட்டங்களை செயல்படுத்த அரசு அலுவலா்கள் முழு வீச்சில் பணியாற்ற வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்:

நிகழாண்டிலேயே 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயப் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என். ஜெயராமன்:

கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா, பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு உள்ளது. பெரும்பாலான தனியாா் உர விற்பனை நிலையங்களில் உரங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடா்கிறது. கூட்டுறவு வங்கிக் கடன், 100 நாள் வேலைத்திட்டம் ஆகியவற்றில் நடைபெறும் மோசடியை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என். செல்லதுரை:

சின்ன வெங்காயத்தை மதிப்புக் கூட்டி விற்கவும், ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு, கொள்முதலுக்கான தொகையை 15 நாள்களில் வழங்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க இளைஞரணிச் செயலா் வீ. நீலகண்டன்:

சேதமடைந்த அரும்பாவூா் பெரிய ஏரி மதகை மழைக் காலம் தொடங்கும் முன் சீரமைக்க வேண்டும். மின் பாதைகளில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும். மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா் காப்பீட்டுத் தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக் கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநா் ச. கருணாநிதி, மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, கோட்டாட்சியா் நிறைமதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பொ. பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com