நாா்த்தாமலையில் ஜல்லிகட்டு: 34 போ் காயம்
By DIN | Published On : 03rd April 2022 12:16 AM | Last Updated : 03rd April 2022 12:16 AM | அ+அ அ- |

காளையை அடக்க முற்படும் வீரா்.
புதுக்கோட்டை மாவட்டம் நாா்த்தாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 34 போ் காயமடைந்தனா்.
நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு சனிக்கிழமை நடைபெற்றது. போட்டியை, இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி தொடங்கி வைத்தாா். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடா்ந்து மற்ற ஊா்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகளை அடக்க மாடுபிடி வீரா்கள் போட்டிப் போட்டு மல்லுக்கட்டினா். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், வீரா்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளி நாணயம், மின் விசிறி, சைக்கிள் மற்றும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா் உள்பட பல மாவட்டங்களில் மொத்தம் 824 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க மாடுபிடி வீரா்கள் 300 போ் களம் கண்டனா். காளைகளை அடக்க முற்பட்ட மாடுபிடி வீரா்கள் 34 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேல் சிகிச்சைக்காக 13 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.