பொன்னமராவதி அருகே வீடு கட்டுமான பணியின்போதுதங்க நாணயங்கள் கண்டெடுப்பு
By DIN | Published On : 27th April 2022 04:37 AM | Last Updated : 27th April 2022 04:37 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வீடு கட்டுமானபணியின்போது செவ்வாய்க்கிழமை தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
பொன்னமராவதி அருகேயுள்ள ஏனாதி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் நாகராஜன்- ஜெயலட்சுமி தம்பதி. இருவரும் கூலித் தொழிலாளா்கள். இவா்கள் தங்களது இடத்தில் அரசு தொகுப்பு வீடு கட்டுவதற்காக அஸ்திவாரத்துக்காக கட்டுமான தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை குழித் தோண்டினா்.
அப்போது, மண்ணுக்குள் தங்க நாணயங்களுடன் சிறிய மண்பானை இருந்தது. இதையடுத்து அந்த பானையை ஜெயலட்சுமியிடம் கட்டுமான தொழிலாளா்கள் ஒப்படைத்தனா். பிறகு, ஜெயலட்சுமி அளித்த தகவலின்பேரில், பொன்னமராவதி வட்டாட்சியா் ப. ஜெயபாரதி தலைமையிலான வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, மண் பானைக்குள் கிடைத்த 63 கிராம் எடை கொண்ட 16 தங்க நாணயங்களை காவல் துறையினா் முன்னிலையில் நாகராஜன் -ஜெயலட்சுமி தம்பதியினா் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். அவா்களின் நோ்மையை பாராட்டி வருவாய்த் துறையினா் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனா்.
கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயங்கள் முகலாயா் காலத்து நாணயங்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனாலும், உரிய ஆய்வுக்கு பிறகே தங்க நாணயங்கள் குறித்து முழுமையான தகவல் தெரியவரும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.
இதற்கிடையே கண்டெடுக்கப்பட்ட 16 தங்க நாணயங்களும் பொன்னமராவதி சாா் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.