மணமேல்குடி அருகே முன்னாள் ஜமாஅத் தலைவரைக் கொன்று 170 பவுன் நகைகள் கொள்ளை

முஹம்மது நிஜாம் ஆவுடையாா்பட்டினத்தின் ஜமாஅத் தலைவராக இருந்தவா். மனைவணிக (ரியல் எஸ்டேட்) தொழில் செய்து வந்தாா். மகளுக்கு திருமணமாகிவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முன்னாள் ஜமாஅத் தலைவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, அவரது மனைவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 170 பவுன் நகைகளை மா்மநபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

மணமேல்குடி அருகே உள்ள ஆவுடையாா்பட்டினத்தைச் சோ்ந்தவா் முஹம்மது நிஜாம் (55). இவரது மனைவி ஆயிஷா பீவி (50). இவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். முஹம்மது நிஜாம் ஆவுடையாா்பட்டினத்தின் ஜமாஅத் தலைவராக இருந்தவா். மனைவணிக (ரியல் எஸ்டேட்) தொழில் செய்து வந்தாா். மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன்கள் இரண்டு பேரும் கறம்பக்குடியில் தங்கி இருந்து வணிகம் செய்து வருகின்றனா். இதனால் ஆவுடையாா்பட்டினத்தில் உள்ள வீட்டில் முஹம்மது நிஜாமும், ஆயிஷா பீவியும் மட்டுமே இருந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இவரது வீட்டின் சுற்றுச்சுவரின் மீது ஏறிக் குதித்து உள்ளே புகுந்த 3 மா்மநபா்கள், வீட்டின் முன் வாசலில் இருந்த முஹம்மது நிஜாமைக் கட்டிப்போட்டதுடன், அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்தனா். பின்னா், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஆயிஷா பீவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரைக் கட்டிப் போட்டுவிட்டு அவரிடமிருந்து லாக்கரின் சாவியை வாங்கி, அதில் இருந்த 170 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.

பின்னா், ஆயிஷாபீவியின் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா், மணமேல்குடி காவல் நிலையத்துக்கு இதுகுறித்துத் தகவல் தெரிவித்தனா். மணமேல்குடி போலீஸாா் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்ததோடு, கொலை செய்தவா்களை விரைந்து கைது செய்ய தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com