மழைக்கு முன்பாக நீா்நிலைகளைத் தூா்வார வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளை மழைக்கு முன்பாக தூா்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் கவிதா ராமு.
கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் கவிதா ராமு.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளை மழைக்கு முன்பாக தூா்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலா் ஜி.எஸ். தனபதி: மாவட்டத்தில் கோடை அறுவடை தொடங்கியுள்ளதால், மூடப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும். ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், புதிதாக மின் கம்பங்கள் போட வேண்டியுள்ள இடங்களில் மின் இணைப்புகள் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 50 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே நிலுவையிலுள்ள மின் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும். அதன்பிறகு அந்தத் திட்டத்தைத் தொடங்க வேண்டும். மும்முனை மின்சாரத்தை குறைந்தது 6 மணி நேரமாவது வழங்க வேண்டும்.

ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன்: மழைக்கு முன்பாக தெற்கு வெள்ளாறு, அக்னியாறு, கல்லணைக் கால்வாய் அனைத்தையும் தூா்வார வேண்டும். கிராமங்கள் தோறும் உழவன் பெருவிழா நடத்த வேண்டும். மோட்டாா் வைத்து விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும்.

விவசாயி மகேந்திரன்: நிலத்தின் வளத்தை அதிகரிக்க போடப்படும் சணப்பைக்கான விதைகள் கிடைப்பதில்லை. குளத்தூா் வட்டத்தில் விவசாயிகளுக்கான சான்றிதழ்களை வழங்கும் பொறுப்புள்ள அதிகாரிகள் பலா் விடுப்பில் சென்றுவிடுகிறாா்கள். அதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

கறம்பக்குடி செழியன்: பயிா்ச் சேதத்துக்கான இழப்பீட்டை விரைந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாண்டியன்: கிராமப்புறங்களில் நடைபெற்றுவரும் வளா்ச்சிப் பணிகள் குறித்த விவரங்களை பணிகள் நடைபெறும்போதே விளம்பரப் பலகையாக வைக்க வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் வரும் வேளாண் பகுதிகளிலும் தனியாா் தண்ணீா் பாட்டில் நிறுவனங்கள் 1500 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கிறாா்கள். அருகமையிலுள்ள வேளாண் நிலங்களில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படுகிறது.

சுசீந்திரன்: பயிா்க்காப்பீடு பெற்றவா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். நெல்கொள்முதல் நிலையங்களில் திடீரென மழை வந்துவிட்டால் நெல் முளைத்துவிடுகிறது. நிலையத்துக்கு வந்துவிட்டால் அதனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு வந்துவிடுகிறது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் கவிதா ராமு பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்ரல் வரையில் பெற வேண்டிய இயல்பான மழையளவான 63.30 மிமீக்கு பதிலாக 124.79 மிமீ மழை பெய்துள்ளது. மாா்ச் வரையில் 1.09 லட்சம் ஹெக்டோ் பரப்பில் நெல்லும், 1871 ஹெக்டோ் பரப்பில் சிறுதானியங்களும், 4668 ஹெக்டோ் பரப்பில் பயறுவகைகளும் பயிரிடப்பட்டுள்ளன.

பிப்ரவரி மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட 492 ஹெக்டோ் நெற்பயிா் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரி வேளாண் இயக்குநா் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8600. மாவட்டம் முழுவதும் போதுமான அளவுக்கு விவசாய இடுபொருட்கள் மற்றும் உரங்களின் இருப்பு உள்ளது என்றாா் கவிதா ராமு.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, காவிரி- குண்டாறு இணைப்புத் திட்ட சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ரம்யாதேவி, வேளாண் இணை இயக்குநா் இராம. சிவகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com