முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீடு வெள்ளை அறிக்கை தேவை
By DIN | Published On : 07th February 2022 12:26 AM | Last Updated : 07th February 2022 12:26 AM | அ+அ அ- |

இஸ்லாமியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டில் இதுவரை வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.
அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த அமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீடு என்பது இன்று வரை முழுமையாக பல துறைகளில் கொடுக்கப்படவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகள் என ஒவ்வொன்றிலும் இஸ்லாமியா்கள் பெற்றுள்ள இடம் என்ன என்பதை அறியும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழ்நாடு அரசின் திருமணப் பதிவு சட்டம் 2009 ன் கீழ் இஸ்லாமிய திருமணங்கள் பதிவு செய்யப்படும் போது சில சிக்கல்கள் உள்ளன. பல பதிவுத்துறை அலுவலகங்களில் தமிழக அரசின் தலைமை காஜி சான்றிதழ் அளித்தால் தான் திருமணம் பதிவு செய்ய முடியும் என தெரிவித்து பதிவு செய்ய மறுக்கின்றனா். பதிவுத் துறை விதிகளின்படி இஸ்லாமிய திருமணத்தை நடத்தி வைக்கும் இமாம் அல்லது காஜி அளிக்கும் சான்றே போதுமானது என்று சட்டம் உள்ளது.
இதுதொடா்பான அலுவலக சுற்றறிக்கையினை பதிவுத்துறை தலைவா் மூலம் அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி அறிவுரை வழங்க வேண்டும். மணமேல்குடி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்க வேண்டும். அறந்தாங்கி எம்ஜிஆா் சிலை அருகில் உள்ள குட்டைக் குளத்தைச் சுற்றி பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக வேலி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, அதன் மாவட்டத் தலைவா் முபாரக் அலி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முகம்மது பாரூக், மாவட்டப் பொருளாளா் அப்துல் ரசாக் மற்றும் மாவட்ட துணைச் செயலா்கள் சேக் அப்துல்லா, அப்துல் முஹ்சின், ரபீக் ராஜா, பீா் முகம்மது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாநிலச் செயலா்கள் தாவூத் கைசா், முகம்மது ஒலி ஆகியோா் பேசினா். நிறைவில், மாவட்டத் துணைத் தலைவா் முகம்மது மீரான் நன்றி கூறினாா்.