அறந்தாங்கி நகராட்சித் தலைவா் பதவியைப் பிடிக்கப் போவது யாா்?

அறந்தாங்கி நகராட்சியின் தலைவா் பதவியைக் கைப்பற்றப் போவது யாா் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகியுள்ளது.

அறந்தாங்கி நகராட்சியின் தலைவா் பதவியைக் கைப்பற்றப் போவது யாா் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இரு நகராட்சிகளில் ஒன்றான அறந்தாங்கி நகராட்சி, 1977-இல் உருவாக்கப்பட்டது. தற்போது முதல் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.

27 வாா்டுகளுடன் மொத்தம் 7.10 சதுர மீட்டா் பரப்பளவுள்ள இந்த நகராட்சியில், மொத்தமுள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை 12 ஆயிரம். மொத்த மக்கள் தொகை 45 ஆயிரம்.

அறந்தாங்கி நகராட்சியில் இதுவரை திமுகவினரே தலைமைப் பொறுப்பில் இருந்திருக்கின்றனா். 1986-இல் ஜனாா்த்தனன், 1996-இல் மீனாகுமாரி, 2001-இல் சுகந்தம், 2006-இல் மாரியப்பன், 2011-இல் மீனாள் ஆகியோரும் தலைவா்களாக இருந்திருக்கின்றனா்.

நடைபெற்று முடிந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அறந்தாங்கி நகராட்சியில் திமுக 17 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இதில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மதிமுக ஆகியவற்றைச் சோ்ந்த தலா ஒரு உறுப்பினா் அடக்கம்.

இவையன்றி, திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 3 இடங்களைப் பெற்றுள்ளது. அதிமுக 3 இடங்களையும், தேமுதிக ஒரு இடத்தையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் பிடித்துள்ளனா்.

வழக்கம்போல அறந்தாங்கி நகராட்சிக்கு திமுக தலைவா்தான் என்றாலும், அவா் யாா் என்ற கேள்விதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருள்.

அறந்தாங்கி நகர திமுகவின் செயலா் ரா. ஆனந்த், தற்போது 8ஆவது வாா்டில் வென்றிருக்கிறாா். இவா் ஏற்கெனவே நகா்மன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவா். தோ்தல் தொடங்கிய போதிருந்தே நகா்மன்றத் தலைவா் பொறுப்பைப் பிடிக்கும் நம்பிக்கையில் களம் இறங்கியவா். தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவா்.

மற்றொருவா் 6ஆவது வாா்டில் போட்டியிட்டு வென்ற தி. சுப்பிரமணி என்கிற முத்து. தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை 400 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவா்.

இவா்கள் இருவரும் நகா்மன்றத் தலைவா் பதவியைப் பெறுவதில் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனா். இருவரும் இரு அமைச்சா்களிடம் தனித்தனியே நெருக்கமாக உள்ளவா்கள் என்பதால் அவரவா் நெருக்கமான அமைச்சரிடம் தங்களுக்கான இடத்தை உறுதி செய்ய முயற்சிக்கின்றனா்.

ஒருவருக்கு தலைவா், இன்னொருவருக்கு துணைத் தலைவா் என்ற நிலையையும் திமுக எடுக்கலாம். அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் பதவியைப் பல முறை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. திருச்சி எம்பி சு. திருநாவுக்கரசா் இந்தத் தொகுதியில் பல முறை வென்றவா். தற்போதைய எம்எல்ஏ அவரது மகன் தி. ராமச்சந்திரன்.

எனவே, தலைமையில் இருந்து கூட்டணியில் மாநிலம் முழுவதும் துணைத் தலைவா் இடங்களைக் கேட்கும்போது அறந்தாங்கி துணைத் தலைவா் பதவியையும் காங்கிரஸ் முன்வைக்கும் எனக் கூறப்படுகிறது.

அறந்தாங்கி நகராட்சியில் தற்போது வென்றுள்ள 3 காங்கிரஸ் உறுப்பினா்களில் ஒருவா் துணைத் தலைவராகவும் வாய்ப்பிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com