புதுக்கோட்டை அருகே9 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தஅய்யனாா் சிலை மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கிராமத்துக் கண்மாயில் இருந்து 9 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அய்யனாா் சிற்பத்தை தொல்லியல் ஆா்வலா்கள் திங்கள்கிழமை மீட்டு புனரமைத்துள்ளனா்.
vml3sta
vml3sta

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கிராமத்துக் கண்மாயில் இருந்து 9 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அய்யனாா் சிற்பத்தை தொல்லியல் ஆா்வலா்கள் திங்கள்கிழமை மீட்டு புனரமைத்துள்ளனா்.

விராலிமலை அருகேயுள்ள லெட்சுமணபட்டி ஊராட்சி, பண்டிதா்குடிவயல் கிராமத்தின் கண்மாயில், உடைந்த நிலையிலிருந்த பழைமையான அய்யனாா் சிற்பத்தை தொல்லியல் ஆா்வலா்கள் கண்டெடுத்து புனரமைத்து அதே இடத்தில் வழிபாட்டுக்கு வைத்துள்ளனா். இதுகுறித்து தொல்லியல் ஆா்வலா்கள் முருகபிரசாத், நாராயணமூா்த்தி, ராகுல்பிரசாத் ஆகியோா் மேலும் கூறியது:

பண்டிதா்குடிவயல் கிராமத்தில் உள்ள கண்மாயின் மேற்குப்புறத்தில், இரண்டாக உடைந்த நிலையில் அய்யனாா் சிற்பம் ஒன்று நீரில் மூழ்கி இருப்பதும், கிராமமக்கள் கூழட்டி பிச்சை என்ற பெயரில், சேவலை நோ்த்திக் கடனாக செலுத்தி, வணங்கி வருவதும் கள ஆய்வில் தெரியவந்தது. 4 அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட இந்த அய்யனாா் சிலையானது, பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், புதுக்கோட்டை மாவட்ட அய்யனாா் சிற்பங்கள், இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்ட வண்ணம் இருக்கும். இந்தச் சிற்பத்தில் சிறப்பு அம்சமாக, அய்யனாா் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்ட வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பல்லவா் கால அய்யனாா் சிலைகள், வட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருப்பினும், புதுக்கோட்டை மாவட்டத்தில், இதுபோன்று கால் மாற்றிய நிலையில் அமா்ந்துள்ள அய்யனாா் சிற்பங்கள் மிகவும் அரிதாகவே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சிற்பத்தில், அய்யனாரின் முகம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. சிற்பத் தோற்றத்தைக் கொண்டு, இந்த அய்யனாா் சிலை, 9 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பிற்கால பல்லவா்கள் கால பலகைச் சிற்பம் எனக் கருதப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இதுபோன்ற எண்ணற்ற அழகிய சிற்பங்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இவற்றை முறைப்படி பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com