திருத்தியது...எட்டு வழிச்சாலைத் திட்டம்: விவசாயிகளின் கோரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும்
By DIN | Published On : 26th January 2022 07:58 AM | Last Updated : 26th January 2022 07:58 AM | அ+அ அ- |

எட்டு வழிச்சாலைத் திட்டத்தில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை முதல்வா் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி:
சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பைத் தெரிவித்தனா். சென்னை உயா் நீதிமன்றமும் திட்டத்தை ரத்து செய்தது. இந்நிலையில், பசுமைத் தீா்ப்பாயத்தில் உரிய அனுமதி பெற்று திட்டத்தை செயல்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கையில் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறி திட்டத்தை கைவிட முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை வைத்துக் கொண்டு சென்னை போன்ற நகரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான வீடுகளை இடிக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனா். மக்களின் வாழ்வாதாரம் குறித்து கவலைப்படாமல் உயா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது வருத்தமளிக்கிறது. கிராம சபைக் கூட்டங்களைத் தகுந்த பாதுகாப்புடன் நடத்த வேண்டும். நோய்த் தொற்று கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு, தவறு செய்த முன்னாள் அமைச்சா்கள் மீது நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் தனது கட்சியில் அண்மையில் சோ்ந்த முன்னாள் அமைச்சா்களுக்கு ஒரு நியாயம், எதிா்க்கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சா்களுக்கு ஒரு நியாயம் என பாரபட்சம் காட்டக் கூடாது என்றாா் பாலகிருஷ்ணன்.
பேட்டியின்போது, மாநிலச் செயற்குழு உறுப்பினா் பெ. சண்முகம், மாநிலக் குழு உறுப்பினா் எம். சின்னத்துரை எம்எல்ஏ, மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...