புதுக்கோட்டையில் ராஜா ராஜகோபால தொண்டைமானின் பிறந்த நூற்றாண்டு விழா

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றது.
புதுக்கோட்டையில் ராஜா ராஜகோபால தொண்டைமானின் பிறந்த நூற்றாண்டு விழா

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் பிறந்த நாளான இன்று வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, நகர்மன்றத் தலைவர் செ. திலகவதி, மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, வருவாய்க் கோட்டாட்சியர் அபிநயா,  தொண்டைமான் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ராஜகோபால தொண்டைமான், முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா ஆர். தொண்டைமான், திமுகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இராசு கவிதைப்பித்தன், நூற்றாண்டு விழாக் குழுவின் செயலர் ரா. சம்பத்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்திய நாட்டுடன் இணைத்த பிறகு அவர் புதுக்கோட்டைக்கு வரவில்லை. திருச்சியிலுள்ள அரண்மனை வளாகத்திலேயே தங்கிவிட்டார். 

அதன்பிறகு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, திருச்சியிலிருந்து  புதுக்கோட்டை மாவட்டம் தனியாக பிரித்து உருவாக்கும் போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்காக ராஜகோபால தொண்டைமானின் அரண்மனையை வளாகத்தை (100 ஏக்கர் பரப்பளவு) குறைந்த தொகையை அரசின் சார்பில் கொடுத்து வாங்கினார்.

அந்த வளாகத்தில் உள்ள ராஜாவின் சிலைக்கு தான் தற்போது தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலையில் நூற்றாண்டு விழாக் குழுவின் சார்பில் 4 நாள் விழா நகர்மன்றத்தில் தொடங்குகிறது. 

ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டையொட்டி அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அமைச்சர் எஸ். ரகுபதி அண்மையில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழவிலும்,  சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா சட்டப்பேரவைக் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது. அதேநேரத்தில் முதல்வரைச்  சந்தித்த முன்னாள் மேயர் சாருபாலா ஆர். தொண்டைமான் மற்றும் நூற்றாண்டு விழாக் குழுவினரும் வலியுறுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக அருங்காட்சியகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என புதன்கிழமை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதும், புதுக்கோட்டை மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com