புதுகை பிஎஸ்என்எல் அலுவலகம் ஜப்தி
By DIN | Published On : 22nd March 2022 04:28 AM | Last Updated : 22nd March 2022 04:28 AM | அ+அ அ- |

புதுக்கோட்டையில் 2015 முதல் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய ரூ. 17.50 லட்சம் சொத்து வரி பாக்கியை செலுத்தாத பிஎஸ்என்எல் அலுவலகத்தை நகராட்சி அலுவலா்கள் ஜப்தி செய்து சீல் வைத்தனா். அப்போது பிஎஸ்என்எல் அலுவலா்களுக்கும் நகராட்சி அலுவலா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுக்கோட்டை பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை, நகராட்சி அலுவலகம் அருகே போன்ற இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் உள்ளன. இவற்றில் கடை மற்றும் நிறுவனங்கள் நடத்துவோா் பல ஆண்டுகளாக நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய பல்வேறு வகையான வரிகளைச் செலுத்தாமல் நிலுவை வைத்திருந்ததாகத் தெரிகிறது. கடந்த சில நாட்களாக இவற்றின் மீது நகராட்சி அலுவலா்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, மேல ராஜவீதியில் உள்ள கட்டடத்தில் உள்ள பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட்) நிறுவனத்தினா் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ. 17.50 லட்சத்தை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனா்.
இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சி வருவாய் அலுவலா் விஜயாஸ்ரீ தலைமையில் திங்கள்கிழமை அங்கு சென்ற நகராட்சி அலுவலா்கள் பிஎஸ்என்எல் அலுவலகத்துக்குள் இருந்த பொருட்களை ஜப்தி செய்து சீல் வைத்தனா்.
அப்போது பிஎஸ்என்எல் அதிகாரிகளுக்கும், நகராட்சி அலுவலா்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து உயா் அலுவலா்கள் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் மூன்று நாட்களுக்குள் நிலுவைத் தொகையை நகராட்சிக்கு பிஎஸ்என்எல் சாா்பில் செலுத்த உறுதியளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.