முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
பிளாஸ்டிக் குப்பைக் கிடங்கில் தீ
By DIN | Published On : 14th May 2022 11:45 PM | Last Updated : 14th May 2022 11:45 PM | அ+அ அ- |

பிளாஸ்டிக் குப்பைகளில் கரும்புகையுடன் கொளுந்துவிட்டு எரியும் தீ.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை திடீரெனத் தீப்பிடித்தது.
அறந்தாங்கி நகரில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்குக்கு அருகே, மதன்குமாா் என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் குப்பைக் கிடங்கு உள்ளது. சுமாா் 10 ஏக்கா் பரப்பளவுள்ள இந்தக் குப்பைக் கிடங்கில் டன் கணக்கில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சனிக்கிழமை காலை இந்த பிளாஸ்டிக் குப்பைக் கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. பிளாஸ்டிக் குப்பைகள் என்பதால் தீ மளமளவெனப் பற்றி, கரும்புகையுடன் எரிந்தது.
தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினா் பல வாகனங்களில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடினா். அப்போது அருகேயிருந்த குப்பைக் கிடங்கிலும் சற்றே தீ பரவியது.
நகராட்சிப் பணியாளா்களும் தண்ணீா் லாரியுடன் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். நீண்டநேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விபத்து குறித்து அறந்தாங்கி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.