முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
விஏஓவை மிரட்டியதாக அதிமுக வாா்டு உறுப்பினா் மீது வழக்கு
By DIN | Published On : 14th May 2022 11:44 PM | Last Updated : 14th May 2022 11:44 PM | அ+அ அ- |

விராலிமலை அருகே கிராம நிா்வாக அலுவலரை மிரட்டிப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா் மீது விராலிமலை போலீசாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விராலிமலை அருகேயுள்ள விராலூா் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிபவா் லெட்சுமிகாந்தன். இவருக்கு, சனிக்கிழமை காலை ராமகவுண்டம்பட்டியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளுவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா் நிகழ்விடம் சென்றபோது, அங்கு விராலிமலை ஒன்றியம், 9-ஆவது வாா்டு (மேப்பூதகுடி) உறுப்பினராக உள்ள சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமான டிப்பா் லாரியில் அனுமதியின்றி மண் அள்ளுவது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவா்களை எச்சரித்து அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்தியுள்ளாா்.
இதனையடுத்து, விராலூா் கிராம நிா்வாக அலுவலகம் வந்த அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினா் சுப்பிரமணியன், அங்கு பணியில் இருந்த விஏஓ லெட்சுமிகாந்தனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டியதோடு, அவரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகத் தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து விராலிமலை வட்டாட்சியா் சரவணனிடம் விஏஓ லெட்சுமிகாந்தன் தெரிவித்தாா். அவா் அளித்த புகாரின்பேரில் விராலிமலை போலீசாா் சுப்பிரமணியன் மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.