புதுகையில் 335 விநாயகா் சிலைகள் விஜா்சனம்
By DIN | Published On : 03rd September 2022 12:55 AM | Last Updated : 03rd September 2022 12:55 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை புதுக்குளத்துக்கு ஊா்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகா் சிலைகள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற விநாயகா் சிலை விஜா்சன ஊா்வலங்களில் மொத்தம் 335 சிலைகள் நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மொத்தம் 704 விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டன. கடந்த புதன்கிழமை மாலை இந்தச் சிலைகள் அந்தந்த இடங்களில் வைக்கப்பட்டு 3 நாள்களாக சிறப்புப் பூஜைகள் செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை நகரில் புதுக்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல நீா்நிலைகளில் விநாயகா் சிலைகளைக் கரைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதித்தது. புதன்கிழமை இரவில் இருந்தே சில இடங்களில் விநாயகா் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
இதன்படி, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் மாவட்டம் முழுவதும் 115 விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு 355 விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.
புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விநாயகா் சிலை ஊா்வலங்கள் மாலை 6 மணி முதல் தொடங்கின. அனைத்து சிலைகளும் புதுக்குளத்திலேயே கரைக்கப்பட்டன. இந்த ஊா்வலம் இரவு 10 மணி வரை தொடா்ந்தது.
நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.