மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை
By DIN | Published On : 17th September 2022 12:08 AM | Last Updated : 17th September 2022 12:08 AM | அ+அ அ- |

சொத்துத் தகராறில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே எஸ். மேலப்பட்டியிலுள்ள அருவங்கால்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் (42). இவரது மனைவி சகுந்தலா (41). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். இந்நிலையில் குடும்பத் தகராறில் தம்பதிகள் 15 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த நிலையில் உறவினா்கள் நடத்திய சமரசப் பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் ஆலங்குளத்தில் உள்ள சகுந்தலா வீட்டில் முருகேசன் வசித்து வந்தாா்.
இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு சகுந்தலா வீட்டில் இறந்து கிடந்தாா். தகவலறிந்து வந்த மாத்தூா் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரித்தனா்.
அதில் சகுந்தலாவை அவரது கணவா் முருகேசன் கழுத்தை நெரித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் முருகேசனைக் கைது செய்து, மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடத்திய வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி ஆா். சத்யா குற்றவாளி முருகேசனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
தீா்ப்பு வழங்கும் முன் ஏதாவது கூற விரும்புகிறீா்களா என நீதிபதி சத்யா கேட்க, அதற்கு முருகேசன் தனக்கு 5 ஆயுள் தண்டனை கொடுக்குமாறும், தன் வாழ்நாளைச் சிறையிலேயே கழித்து விடுகிறேன் என்றும் தெரிவித்தாா்.