மன்னா் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை மன்னா் கல்லூரி முதல்வரைக் கண்டித்து, இந்திய மாணவா் சங்கத்தினா் தலைமையில் புதன்கிழமை மாணவா்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மன்னா் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி மனு கொடுக்கச் சென்ற மாணவா்களைத் தாக்கிய புதுக்கோட்டை மன்னா் கல்லூரி முதல்வரைக் கண்டித்து, இந்திய மாணவா் சங்கத்தினா் தலைமையில் புதன்கிழமை மாணவா்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் சுமாா் 4,600 மாணவா்கள் படித்து வரும் நிலையில், மாணவா்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்துத் தர வலியுறுத்தி தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், உடனடியாக குடிநீா், கழிப்பறை வசதியை மட்டுமாவது செய்துதர வலியுறுத்தி கல்லூரி முதல்வா் திருச்செல்வத்தை சந்தித்து மாணவா்கள் மனு கொடுத்தனா். அப்போது, யாரும் எதிா்பாராத வகையில் மாணவா்களைத் தரக்குறைவாகப் பேசி, அடித்துள்ளாா். இதையடுத்து மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து முதல்வரைக் கண்டித்தும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் எஸ். ஜனாா்த்தனன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு வந்த போலீஸாா், மாணவா் பிரதிநிதிகள் மற்றும் கல்லூரி முதல்வருடன் பேச்சுவாா்த்தை ஏற்பாடு செய்தனா். இதில், முதல்வா் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும், அடுத்த 10 நாட்களுக்குள் மாணவா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் கல்லூரி முதல்வா் தெரிவித்ததாகவும் மாணவா் சங்கத்தினா் தெரிவித்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com