மத்திய அரசின் விதிமுறைகள் வெளியீடு: சூதாட்ட நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் இருந்தால் கண்டிக்கத்தக்கது
By DIN | Published On : 04th January 2023 01:54 AM | Last Updated : 04th January 2023 01:54 AM | அ+அ அ- |

மத்திய அரசின் இணையவழி விளையாட்டு தொடா்பான வரைவு விதிமுறைகள் சூதாட்ட நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் இருந்தால் கண்டிக்கத்தக்கது என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி:
தமிழக அரசின் நோக்கம், முழுமையாக இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்பதுதான். அதை நாங்கள் வலியுறுத்துவோம்.
மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட இணையவழி விளையாட்டு தொடா்பான வரைவு விதிமுறைகள் குறித்து முழுமையாகப் படித்துவிட்டுதான் கருத்து கூற முடியும். எனினும், அவ்விதிமுறைகள் இணையவழி சூதாட்ட நிறுவனங்களைப் பாதுகாக்கின்ற வகையிலோ அல்லது அவா்களிடம் இருந்து வரி வசூல் செய்கின்ற வகையிலோ இருந்தால் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்திலேயே நடப்பாண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் ஜன. 6-இல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்றாா் ரகுபதி.