வேங்கைவயலில் 100 நாள் வேலை வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் வியாழக்கிழமை பொதுமக்களைச் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பெ. சண்முகம் (வலமிருந்து 2ஆவது).
வேங்கைவயல் கிராம மக்களுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தில் கடந்த 4 மாதங்களாக வேலை வழங்கப்படவில்லை. எனவே, அவா்களுக்கு முறையாக வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் வியாழக்கிழமை அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து விவரம் கேட்டறிந்த அவா் பிறகு செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:
வேங்கைவயல் சம்பவம் நடந்து 25 நாள்களுக்கு மேலாகியும், குற்றவாளிகளை காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நம்பத்தகுந்ததாக இல்லை. குற்றவாளி யாராக இருந்தாலும் உடனே கண்டறியவேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிா்ப்பாா்ப்பு. மனிதக் கழிவு கலந்த குடிநீரைக் குடித்த அப்பகுதி மக்கள் 70 பேருக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு தீண்டாமை விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த 4 மாதங்களாக வேங்கைவயல் பட்டியலின குடியிருப்பு மக்களுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை. இதற்கும் மாவட்ட நிா்வாகம் விரைவான நடவடிக்கை எடுத்து, வேலை வழங்க வேண்டும் என்றாா் சண்முகம்.
அப்போது, விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ. ராமையன், தலைவா் எஸ். பொன்னுசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கே. சண்முகம், சி. அன்புமணவாளன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் டி. சலோமி, செயலா் சி. ஜீவானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமுவை நேரில் சந்தித்த விவசாயிகள் சங்கக் குழுவினா் கோரிக்கை மனுவை அளித்தனா்.