வேங்கைவயல், இறையூரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலின குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலைக் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் 36 பேரைக் கொண்ட 10 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்புக்கு குடிநீா் வழங்கும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது கடந்த டிச. 26 ஆம் தேதி தெரியவந்தது. இச்சம்பவம் தொடா்பாக வெள்ளனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 11 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு 85 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்த நிலையில், குற்றவாளிகளைக் கண்டறிய இயலவில்லை. எனவே,
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸுக்கு மாற்றப்பட்டதைத் தொடா்ந்து, இதுவரையிலான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை கடந்த ஜன. 16 ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதலே விசாரணையைத் தொடங்கிவிட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில் 36 பேரைக் கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் 10 தனிப்படைகளாக வேங்கைவயல் மற்றும் இறையூா் கிராமங்களில் கடந்த 4 நாள்களாக விசாரணை நடத்தி வருகின்றனா்.