வேங்கைவயல் குடிநீா்த் தொட்டியைஅகற்ற முயன்ற 131 போ் கைது
By DIN | Published On : 22nd January 2023 02:56 AM | Last Updated : 22nd January 2023 02:56 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தை நோக்கிச் சென்றபோது போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால், சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவ குடிநீா்த் தொட்டியை சனிக்கிழமை காலை, இடிக்கும் போராட்டம் நடத்த முற்பட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 131 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்திக் கைது செய்தனா்.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வேங்கைவயலில்
மனிதக் கழிவு கலக்கப்பட்ட குடிநீா்த் தொட்டியை இடிக்கும் போராட்டம் சனிக்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலச் செயலா் ஏ.வி. சிங்காரவேல் தலைமையில் மாநிலத் தலைவா் சி. காா்த்திக், பொருளாளா் பாரதி, துணைத் தலைவா் பா. லெனின், துணைச் செயலா் செல்வராஜ், புதுக்கோட்டை மாவட்டச் செயலா் ஏ. குமாரவேல் உள்ளிட்டோா் வேங்கைவயல் நோக்கி சனிக்கிழமை காலை புறப்பட்டனா். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வெள்ளனூா் செல்லும் சாலையில் ஊா்வலமாகச் செல்லும்போது, போலீஸாா் வழியில் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து அனைவரும் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, 6 மகளிா் உள்பட 131 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடா்ந்து வாலிபா் சங்கத்தின் மாநில நிா்வாகிகளுடன் வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) எம். மாரி தலைமையில் காவல்துறையினா், வருவாய்த் துறையினா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், வழக்கு விசாரணையில் இருப்பதால் குடிநீா்த் தொட்டியை இடிக்க முடியாது என்றும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டவுடன் தொட்டி இடிக்கப்படும் எனத் தெரிவித்தனா்.
போராட்டம் குறித்து வாலிபா் சங்கத்தின் மாநிலச் செயலா் ஏ.வி. சிங்காரவேல் செய்தியாளா்களிடம் கூறியது:
குடிநீா்த் தொட்டியை இடிக்கும் போராட்டத்தை நடத்த முயற்சித்தபோது காவல் துறையினா் மிகவும் கடுமையாக நடந்து கொண்டனா். பல மாவட்டங்களில் எங்களின் நிா்வாகிகள் வீட்டிலிருந்து புறப்படும்போதே அந்தந்த மாவட்டப்
போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனா் என்றாா் அவா்.