புதுகையில் தேசிய வாக்காளா் தின விழா
By DIN | Published On : 26th January 2023 12:00 AM | Last Updated : 26th January 2023 12:00 AM | அ+அ அ- |

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா் தினவிழாவில், 80 வயதைக் கடந்த மூத்த வாக்காளா்களை அழைத்து சிறப்பித்த மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு.
நாட்டின் 13ஆவது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா்.
மாவட்டத்தைச் சோ்ந்த 80 வயதைக் கடந்த மூத்த வாக்காளா்கள், திருநங்கை வாக்காளா், மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் ஆகியோரை மாவட்ட ஆட்சியா் சிறப்பித்தாா். தொடா்ந்து அவா்கள் முன்னிலையில் வாக்காளா் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து வாக்காளா் விழிப்புணா்வு பாடல் ஒலிபரப்பப்பட்டது.
முன்னதாக வாக்காளா் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழுவினா்களுக்கும், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா். மேலும் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணியின்போது, கருடா செயலியில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு நற்சான்றுகளையும் அவா் வழங்கினாா்.
முன்னதாக 13வது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியும் புதுக்கோட்டை நகரில் நடைபெற்றது. வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து இப்பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி தொடங்கி வைத்தாா்.
வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கருணாகரன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பா.சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஆா்.கணேசன், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.