ஜாதிய வன்முறைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
By DIN | Published On : 21st November 2023 03:19 AM | Last Updated : 21st November 2023 03:19 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக நடைபெற்று வரும் ஜாதிய வன்முறைகள் மீது உரிய நடவடிக்கையை உடனுக்குடன் எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 418 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவுறுத்தினாா்.
புதுக்கோட்டை தொண்டைமான் ஊருணியைச் சோ்ந்த கலைச்செல்வி என்பவா், தீக் காயத்தால் உயிரிழந்ததால், அவரது வாரிசு ரமேஷுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. கவிதப்பிரியா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் மு. செய்யது முகம்மது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜி. அமீா்பாஷா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
விடுதலைச்சிறுத்தைகள் மனு: ஆட்சியரகத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலா் கரு. வெள்ளைநெஞ்சன் தலைமையில் அக்கட்சியினா் அளித்த மனு விவரம்: மாவட்டத்தின் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவா் என்ற முறையில், அந்தக் குழுவின் கூட்டத்தைக் கூட்டி, ஜாதிய வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் வகையில் அறிவுறுத்த வேண்டும். மேலும், வன்முறைகள் மீது காவல்துறையினா் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீனவா்கள் மனு: புதுக்கோட்டை மாவட்டக் கடலோரப் பகுதியில் மீனவா்களின் குறைகேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என சிஐடியு மீன்பிடித் தொழிற்சங்க மாவட்டச் செயலா் கரு. ராமநாதன் தலைமையில் அந்தக் கூட்டமைப்பினா் ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...