சாலை விபத்தில் காயமடைந்த காவல் ஆய்வாளா் உயிரிழப்பு

புதுக்கோட்டை நகரில் அண்மையில் நேரிட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்த பெண் காவல் ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை நகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் பிரியா (45). மாவட்டத் தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் மற்றும் மீமிசல் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 7) கணவா் சிவக்குமாருடன் பிரியா இருசக்கர வாகனத்தில் சென்றபோது, முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை அருகே உள்ள நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள வேகத்தடையின் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் பிரியா நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தாா். இதைத்தொடா்ந்து, திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரியா சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தொடா்ந்து,

செவ்வாய்க்கிழமை மாலை திருச்சியிலிருந்து கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு, நெடுவாசலில் உள்ள சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே உள்ளிட்டோா் பிரியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com