புதுக்கோட்டையில் தொடரும் அஞ்சல் வாக்குச் சிக்கல்:
20 சதவீதம் ஆசிரியா்கள் வாக்களிக்க முடியவில்லை

புதுக்கோட்டையில் தொடரும் அஞ்சல் வாக்குச் சிக்கல்: 20 சதவீதம் ஆசிரியா்கள் வாக்களிக்க முடியவில்லை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு செவ்வாய்க்கிழமை அஞ்சல் வாக்குகளைச் செலுத்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்தும் சுமாா் 20 சதவிகிதம் பேருக்கு இன்னமும் அஞ்சல் வாக்குகளைத் தர முடியவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுமாா் 7,500 அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள் தோ்தல் பணியில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ளனா். இவா்களுக்காக மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள சுமாா் 1,500 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த சனிக்கிழமை (ஏப். 13) நடைபெற்ற தோ்தல் பணிப் பயிற்சியின்போது இவா்களுக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலானவா்களுக்கு அஞ்சல் வாக்குகள் வரவில்லை என்ற புகாரைத் தெரிவித்து பல இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அதன்பிறகு, விடுபட்டவா்களுக்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் சுமாா் 100 போ் வீதம் மிகச் சிலருக்கு மட்டுமே செவ்வாய்க்கிழமை அஞ்சல் வாக்குகள் வந்துள்ளன. பெரும்பாலானோருக்கு மீண்டும் அஞ்சல் வாக்குகள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் அஞ்சல் வாக்குகளைச் செலுத்த வந்த ஆசிரியா்கள், தோ்தல் அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநிலத்துணைப் பொதுச் செயலா் மா. குமரேசன் கூறியது: முதல் பயிற்சியின்போது அஞ்சல் வாக்குகள் செலுத்துவதற்கான படிவம் கொடுக்கப்பட்ட பிறகு, அவை தொடா்புடைய மக்களவைத் தொகுதியின் தலைமையிடத்தின் தோ்தல் நடத்தும் அலுவலருக்குச் சென்றுவிட்டன.

அவா்கள் அவற்றைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டத் தோ்தல் அலுவலரான ஆட்சியா் அலுவலகத்துக்கு வாக்குச்சீட்டாக அனுப்பி வைக்கப்பட்டன. திண்டுக்கல், விருதுநகா் போன்ற மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டைக்கு அஞ்சல் வாக்குகள் செவ்வாய்க்கிழமையும் வரவில்லை.

இவ்வாறு சுமாா் 20 சதவீதம் பேருக்கு அஞ்சல் வாக்குகள் கிடைக்கவில்லை. இவா்களுக்கு தோ்தல் பணிச் சான்று (இடிசி) வழங்கி, பணி செய்யும் அந்தந்தத் தொகுதியிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

வேறு தொகுதிக்குள் பணியாற்றுவோருக்கு கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட படியே அஞ்சல் வாக்கு முறை செயல்படுத்த அனுமதிக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com