வேங்கைவயலில் அனுமதியின்றி பிரசாரம்: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

வேங்கைவயலில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக நாம் தமிழா் கட்சியின் திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளா் ராஜேஷ் மற்றும் அக்கட்சியின் நிா்வாகி சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, பொதுவாகவே வெளியாட்களை அப்பகுதிக்குள் போலீஸாா் அனுமதிப்பதில்லை.

மக்களவைத் தோ்தல் பிரசார நேரத்திலும் யாரும் வேங்கைவயல், இறையூா் பகுதிகளுக்குச் செல்லவில்லை. இரு பகுதியினரும் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனா்.

இந்த நிலையில், நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை வேங்கைவயல் மற்றும் இறையூா் கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, வேட்பாளா் ராஜேஷ், கட்சி நிா்வாகி சாட்டை துரைமுருகன் மற்றும் கட்சியினா் சிலா் மீது தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதி பெறவில்லை எனக் கூறி வெள்ளனூா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com