புதுகை மாவட்டத்தில் 20 வழக்குகள் பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்தல் விதிகளை மீறியதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா. மொ்சி ரம்யா தெரிவித்தாா்..

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பணம், பரிசு பொருள்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுப்பதற்காக பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதன் அடிப்படையில் அறந்தாங்கியில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினரின் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மீது, அனுமதியின்றி கூட்டம் நடத்தியது, ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதேபோல, அறந்தாங்கி அருகே விக்னேஸ்வரபுரத்தில் அனுமதியின்றி ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக அதிமுக நகரச் செயலா் ஆதிமோகன குமாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, தோ்தல் புறக்கணிப்பு செய்ய உள்ளதாக குடுமியான்மலை, விளானூா், பொன்பேத்தி, வெவ்வேல்பட்டி, திருக்கட்டளை, மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் பிளக்ஸ் பேனா் வைக்கப்பட்டது குறித்து அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேங்கைவயலில் அனுமதியின்றி வாக்கு சேகரித்த நாம் தமிழா் வேட்பாளா் ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 13 தோ்தல் விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், உரிய ஆவணங்களின்றி பணம், பொருட்கள் கொண்டு சென்ாக வெவ்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com