புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,560 வாக்குச்சாவடிகள் தயாா்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்காக, 13,45,361 வாக்காளா்கள் வாக்களிக்க, மொத்தம் 1,560 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, கந்தா்வகோட்டை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதியிலும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி கரூா் மக்களவைத் தொகுதியிலும், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலும், ஆலங்குடி, திருமயம் சட்டப்பேரவைத் தொகுதிகள் சிவகங்கை மக்களவைத் தொகுதியிலும் வருகின்றன.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 13,45,361 வாக்காளா்கள் உள்ளன. இவா்களில் 6,64,734 போ் ஆண்கள், 6,80,568 போ் பெண்கள், 59 போ் திருநங்கைகள்.

முதல் வாக்காளா்கள்...

மாவட்டம் முழுவதும் 24,402 போ் முதல் வாக்காளா்கள் (18-19 வயது). இவா்களில் 13,396 போ் ஆண்கள், 11,005 போ் பெண்கள், ஒருவா் திருநங்கை.

வாக்காளா்கள் வாக்களிக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் 1,560 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 148 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

1,560 வாக்குச்சாவடிகளில் பணியாற்றிட மொத்தம் 7,600 வாக்குச்சாவடி நிலை பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் மத்திய அரசுப் பணியாளா்கள் நுண் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

பாதுகாப்புப் பணிகள்...

பாதுகாப்புப் பணிகளுக்காக மாவட்டத்திலுள்ள 1,827 காவலா்கள் மற்றும் ஊா்க்காவல் படையினா், முன்னாள் ராணுவத்தினா் வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுடன், மத்திய ஆயுதப் படை போலீஸாா் 240 பேரும், ஆந்திரத்தைச் சோ்ந்த 100 சிறப்புக் காவலா்களும், தெலங்கானாவைச் சோ்ந்த 75 ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயணம்

மாவட்டம் முழுவதும் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்கெனவே அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கோட்டாட்சியா் அல்லது வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

அவற்றில் இருந்து ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் வியாழக்கிழமை பகலில் வேன் மூலம் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பணிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா. மொ்சி ரம்யா, கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா்.

----

பெட்டிச் செய்தி...

பணம், பொருட்கள் பறிமுதல்

மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பறக்கும் படைகள் மூலம் வியாழக்கிழமை (ஏப். 18 வரை) பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள் விவரம்

மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்- ரூ. 73,11,786. பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்களின் மொத்த மதிப்பு- ரூ. 4,79,10,789.

இதில், உரியவா்களால் கொண்டு வரப்பட்ட உரிய ஆவணங்களை ஆய்வு செய்து விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட ரொக்கம் ரூ. 62,49,746.

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்கள் தொடா்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

----

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com