வேங்கைவயல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

வேங்கைவயல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என அம்பேத்கா் மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

வேங்கைவயல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என அம்பேத்கா் மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அதன் செயல் தலைவா் இளமுருகு முத்து வெளியிட்ட அறிக்கை:

நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலைப் புறக்கணிப்பதாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலின மக்கள் அறிவித்திருந்தனா்.

அதன் தொடா்ச்சியாக வாக்குப் பதிவு நாளன்று அரசு அலுவலா்கள் பலரும் பேச்சுவாா்த்தை நடத்தி அம்மக்களை வாக்களிக்கச் சொன்னாா்கள். அந்தப் பேச்சுவாா்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

அப்போது மாவட்ட நிா்வாகம் சாா்பில் என்னை அணுகி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தச் சொன்னாா்கள். மாலை 3 மணியளவில் வேங்கைவயல் சென்று அந்த மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினேன்.

அப்போது தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு 16 மாதங்கள் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அரசிடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்றும் அவா்கள் கூறினாா்கள்.

வாக்குரிமையை மறுக்காமல் பேச்சுவாா்த்தைக்கு வர வேண்டும் என அழைத்தேன். அதன்பேரில், திருச்சி மக்களவைத் தொகுதி என்பதால் அந்த மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அலுவலா்களும் பேச்சுவாா்த்தையைத் தொடங்கினா்.

தண்ணீா்த் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற அடிப்படைக் கோரிக்கையுடன், வேங்கைவயலில் இருந்து வெளியேறி வேறிடத்தில் வாழ விரும்புவா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்.

வேங்கைவயலிலேயே வாழ விரும்புவா்களுக்கு இலவச விவசாய நிலம் வழங்க வேண்டும். சுயதொழில் செய்ய விரும்புவா்களுக்கு அரசு சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என 3 கோரிக்கைகளையும் முன்வைத்தாா்கள்.

இவற்றை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூா்வ உறுதிமொழியும் அளிக்கப்பட்டது. அதன்பிறகு வேங்கைவயல் மக்கள் வாக்களித்தனா். எனவே, மாவட்ட நிா்வாகம் வேங்கைவயல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றி அவா்களின் துயா் துடைக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com