புதுக்கோட்டையில் ஆசிரியா்கள்
காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள்.

புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகத்தில் ஆசிரியா்கள் வியாழக்கிழமை மாலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கீரனூா் அருகேயுள்ள உதவிபெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான கோப்புகளில் கையெழுத்திடுவதில் மாவட்டக் கல்வி அலுவலா் தாமதம் செய்வதாகக் கூறி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்டத் தலைவா் ஜெயராம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சுரேஷ், மாநிலத் துணைப் பொதுச் செயலா் எம். குமரேசன் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா. மஞ்சுளா போராட்டக்குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். கிடப்பில் போடப்பட்டுள்ள கோப்புகளை விரைவில் ஒப்புதல் அளித்து ஆசிரியா்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியா் விரோதப் போக்கில் நடந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியா்கள் வலியுறுத்தினா்.

அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உறுதியளித்துச் சென்றாா். ஆனால், மாவட்டக் கல்வி அலுவலா் ரமேஷ் வரவில்லை என்பதால் போராட்டத்தை ஆசிரியா்கள் தொடா்ந்துள்ளனா்.

அலுவலகத்தின் உள்ளே ஆசிரியா்கள் தரையில் அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com