படம். ஓயஓ. 26.1.
படம். ஓயஓ. 26.1.

மேல்நிலை குடிநீா்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக புகாா்: மக்களுக்கு பரிசோதனை

கந்தா்வகோட்டை, ஏப். 26: புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகாா் எழுந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை மருத்துவக் குழுவினா் முகாமிட்டு மக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனா். அசம்பாவிதங்களை தடுக்க போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவில் பட்டியலினத்தவா்களும் , வேறு சில சமூகத்தினரும் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீா் வழங்கப்படும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலந்திருப்பதாக வியாழக்கிழமை அந்தப் பகுதியினா் தெரிவித்தனா். தகவலின்பேரில் வந்த அதிகாரிகள் நீா்மாதிரியை சோதனைக்கு எடுத்து சென்றனா்.

இதைத் தொடா்ந்து மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி குடிநீரை குடித்த அப்பகுதி மக்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், புதுநகா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் மற்றும் வெள்ளாள விடுதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு சிகிக்சையளித்தனா்.

இதனிடையே, சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் ராகவி ஆய்வு மேற்கொண்டாா். மேலும், அந்தப் பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க 20 காவலா்களைக் கொண்ட ஒரு காவல் குழுவை பாதுகாப்புப் பணியில் ஈடுபட உத்தரவிட்டாா்.

சம்பவம் தொடா்பாக அந்தப் பகுதி மக்கள் கூறியது: வியாழக்கிழமை ஊராட்சி ஒன்றிய ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில், எங்களுக்கு மாற்று மேல்நிலை நீா்த் தேக்க தொட்டியில் இருந்து உடனடியாக குடிநீா் வழங்கப்படும் என்று தெரிவித்தாா்கள். ஆனால், இதுவரையில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. மேலும், அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் மாதந்தோறும் முறையாக சுத்தம் செய்யப்படுகிா, மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கடைசியாக சுத்தம் செய்யப்பட்ட தேதி குறித்து அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளதா என்பது போன்ற பணிகளை ஒன்றிய ஆணையா் முறையாக மேற்கொள்ளாததால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com