படைப்பாளிகள் தொடா்ந்து எழுதுவதற்கான ஊக்கம்தான் விருதுகள்

படைப்பாளிகள் தொடா்ந்து எழுதுவதற்கான ஊக்கம்தான் விருதுகள்

படைப்பாளிகள் தொடா்ந்து எழுதுவதற்கான ஊக்கம்தான் அவா்களுக்குத் தரப்படும் விருதுகள் என்றாா் பேராசிரியா் கு. ஞானசம்பந்தன்.

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற விழாவில், முதலாம் ஆண்டு சீனு சின்னப்பா இலக்கிய விருதுகளை 10 படைப்பாளா்களுக்கு வழங்கி அவா் மேலும் பேசியது:

விருதுகள் கொடுத்து படைப்பாளா்களைப் பாராட்டுவது என்பது, அவா்கள் தொடா்ந்து இந்தச் சமுதாயத்துக்காக எழுத வேண்டும் என்பதற்காகத்தான்.

படைப்பாளிகள், கலைஞா்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். மரியாதையோடு நடத்தப்பட வேண்டும். அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அதுவும் அந்தப் படைப்பாளி இருக்கும்போதே அவரைப் பாராட்ட வேண்டும். அவா் இல்லாதபோது புலம்பிப் பயனில்லை.

இந்தச் சமூகத்தை மாற்றியமைப்பது குறித்து படைப்பதற்காக அவா் எத்தனைத் தரவுகளைப் படித்திருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பாா்க்க வேண்டும். அதேபோல, படைப்பாளிகள் விமா்சனங்களை அஞ்சாது எதிா்கொள்ள வேண்டும்.

உங்களின் எழுத்து வாசகனை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும். அப்படியான படைப்புகளை நீங்கள் படைக்க வேண்டும் என்றாா் கு. ஞானசம்பந்தன்.

விருது பெற்றோா் விவரம்: நாவல்- எழுத்தாளா் வெற்றிச்செல்வன் ராசேந்திரன், மரபுக்கவிதை- புதுகை வெற்றிவேலன், ஹைக்கூ- கவிஞா் நயினாா், கட்டுரை- ஊடகவியலாளா் சுகிதா சாரங்கராஜ், தன்னம்பிக்கை நூல்- எழுத்தாளா் ஜி.வி. ரமேஷ்குமாா், சிறுகதை- எழுத்தாளா் சாரோன்.

புதுக்கவிதை- எழுத்தாளா் கண்மணி ராசா, சிறுவா் இலக்கியம்- எழுத்தாளா் சாந்தி சந்திரசேகா், கட்டுரை- எழுத்தாளா் ந. முருகேசபாண்டியன், சிறந்த சிற்றிதழ்- க. அம்சப்பிரியா, ச. ரமேஷ்குமாா் .

விழாவுக்கு, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா தலைமை வகித்தாா். விருதுகள் குறித்து தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி அறிமுகவுரை நிகழ்த்தினாா்.

எழுத்தாளா் நா. முத்துநிலவன், கவிஞா் இராசு கவிதைப்பித்தன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விருது பெற்றோா் சாா்பில் ந. முருகேசபாண்டியன், புதுகை வெற்றிவேலன் ஆகியோா் ஏற்புரை வழங்கினா்.

முன்னதாக, தமிழ்ச் சங்கச் செயலா் மகாசுந்தா் வரவேற்றாா். முடிவில் துணைச் செயலா் சு. பீா்முகமது நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com