மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: முள்ளூரில் பொதுமக்கள் உண்ணாவிரதம்

புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என வலியுறுத்தி முள்ளூரில் அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை அருகே உள்ள வாகவாசல், முள்ளூா், திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, 9 ஏ நத்தம் பண்ணை, 9 பி நத்தம் பண்ணை ஆகிய ஊராட்சிகளும், தேக்காட்டூா் ஊராட்சியில் உள்ள சில பகுதிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயா்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊராட்சிகளை மாநகராட்சியாக்கினால் 100 நாள் வேலை திட்டம் கிடைக்காது, வரி மற்றும் கட்டணங்கள் உயரும் என்பதால் மாநகராட்சியோடு இணைக்க எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இதன்படி, அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவையும் புறக்கணித்தனா். இதன் தொடா்ச்சியாக, முள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

‘வேண்டாம் மாநகராட்சி’ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சீ.அ. மணிகண்டன் மற்றும் திமுக கிளைச் செயலா் கோபால், அதிமுக ஒன்றியப் பொறுப்பாளா் சுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் நித்திய கல்யாணி, ஊராட்சிக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com