ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
ஆன்லைன் அபராத முறையை போலீஸாா் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஆட்டோ போக்குவரத்துத் தொழிலாளா் சம்மேளனம் (ஏஐடியுசி) சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா் பா. பாண்டியராஜன் தலைமை வகித்தாா்.
ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் ப. ஜீவானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், மாவட்ட ஏஐடியுசி சிறப்புத் தலைவா் வீ. சிங்கமுத்து, பொருளாளா் டி.எம். கணேசன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஆன்லைன் அபராத முறையை போலீஸாா் கைவிட வேண்டும். ஆட்டோ செயலியை தபிழ்நாடு அரசே உருவாக்கி செயல்படுத்த வேண்டும். தனியாா் ஆட்டோ செயலி நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்.
மத்திய அரசின் மோட்டாா் வாகனத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். ஆட்டோ தொழிலாளா் நல வாரியப் பலன்களை முறையாக அனைவருக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.