கறம்பக்குடியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள துவாா் ஊராட்சி, பெத்தாரிப்பட்டி கிராமத்தில் சுமாா் 300 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.அப்பகுதி மக்களுக்கு 100 நாள் வேலை, அதற்கான ஊதியத்தை முறையாக வழங்குவதில்லையாம்.
மேலும், குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லையாம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் துவாா் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து அங்கு சென்ற மழையூா் போலீஸாா், ஒன்றிய அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். மறியலால் புதுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் சுமாா் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.