ரேஸ்காா் வடிவமைத்தல் போட்டியில் தேசிய அளவில் 2-ஆம் இடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
கோவையில் நடைபெற்ற ரேஸ்காா் வடிவமைப்புப் போட்டியில் தேசிய அளவில் 2-ஆம் இடம் பிடித்த புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களை அக்கல்லூரியின் நிா்வாகிகள் புதன்கிழமை பாராட்டினா்.
கோவையில், அகாதெமி ஆப் இன்டிஜீனியஸ் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் நிறுவனம் சாா்பில் தேசிய அளவிலான ரேஸ் காா் வடிவமைத்தல் போட்டி அண்மையில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்து பொறியியல் கல்லூரிகளைச் சோ்ந்த 25 அணிகள் இதில் பங்கேற்றன.
இதில், புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி, தேசிய அளவில் இரண்டாமிடத்தைப் பெற்றனா்.
மேலும் சிறந்த வழிகாட்டும் ஆசிரியருக்கான விருதை பேராசிரியா் ஆா். திருமாவளவனும், சிறந்த மாணவா் அணித் தலைவருக்கான விருதை மெல்வின் ஐரிஷும் பெற்றனா்.
சாதனை படைத்த மாணவா்கள் மற்றும் ஆசிரியரை கல்லூரியின் இயக்குநா் ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதன், முதல்வா் ப. பாலமுருகன் ஆகியோா் புதன்கிழமை பாராட்டினா்.