நீதிமன்றத்தை அணுகும் வசதி அனைவருக்கும் தேவை

ஒவ்வொரு மனிதனுக்கும் நீதிமன்றத்தை அணுகும் வசதி கிடைக்க வேண்டும் என்றாா் சென்னை உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்கா புா்வாலா.
புதுக்கோட்டையில் புதிய உரிமையியல் நீதிமன்றங்களை சனிக்கிழமை தொடங்கிவைத்த சென்னை உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்காபுா்வாலா (இடமிருந்து 4ஆவது). உடன் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, உய
புதுக்கோட்டையில் புதிய உரிமையியல் நீதிமன்றங்களை சனிக்கிழமை தொடங்கிவைத்த சென்னை உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்காபுா்வாலா (இடமிருந்து 4ஆவது). உடன் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, உய

ஒவ்வொரு மனிதனுக்கும் நீதிமன்றத்தை அணுகும் வசதி கிடைக்க வேண்டும் என்றாா் சென்னை உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்கா புா்வாலா.

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகம் செயல்படும் பாரம்பரியம் மிக்க கட்டடத்தைப் பாதுகாப்பாக பழைமை மாறாமல் மறுசீரமைப்பு செய்யும் ரூ. 15 கோடியிலான பணிக்கு அடிக்கல் நாட்டியும், மணமேல்குடி, ஆவுடையாா்கோவில், விராலிமலை ஆகிய இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் மன்றங்களைத் தொடங்கி வைத்தும், புதுக்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட சமரச மையத்தைத் திறந்து வைத்தும் சனிக்கிழமை மாலை அவா் மேலும் பேசியது:

நாட்டின் ஒவ்வொரு மனிதனுக்கும் நீதிமன்றத்தை அணுகும் வசதி கிடைக்க வேண்டும். பணம், படிப்பு போன்ற எதுவும் தடையாக இருக்கக் கூடாது.

140 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த நீதிமன்றம் என்பது வெறும் கட்டடம் அல்ல. அது, அந்தக் கட்டடத்தில் மேற்கொள்ளப்படும் வழக்குரைஞா்களின் வாதங்களும், நீதிபதிகளின் தீா்ப்புரைகளையும் கொண்டது. அவை அனைத்தும் அடுத்த சந்ததிகளுக்கும் கடத்தப்பட வேண்டிய வரலாற்றின் சாட்சியங்களாகும்.

மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் நீதிமன்றம் கொண்ட இந்த மாவட்டத்தைப் போலவே, அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து வட்டங்களிலும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

வழக்குரைஞா்கள் சமரசத் தீா்வுகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதனால் உங்களின் வழக்காடும் தொழில் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.

நீதித்துறைக்கு குறைந்தது ஒரு சதவிகிதமாவது நிதியை முழுமையாக ஒதுக்கிட, மாநில அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சா் பேச வேண்டும். அவ்வாறு செய்தால் நாட்டிலேயே அதிக நிதி ஒதுக்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்.

காகிதமில்லா வழக்காடுதல் என்ற நவீனத் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப வழக்குரைஞா்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் கங்கா புா்வாலா.

விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு மாநில சமரசத் தீா்வு மையத் தலைவரும், சென்னை உயா் நீதிமன்ற நீதிபதியுமான ஆா். மகாதேவன் பேசியது:

வெறுமனே வழக்குகளில் மட்டுமல்ல, மனித வாழ்க்கையிலும் அறம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது இம்மண்ணின் தத்துவம். எனவே, சாதாரண ஏழை, எளிய மக்களுக்கும் நீதி கிடைத்திட எல்லோரும் பணியாற்ற வேண்டும் என்றாா் மகாதேவன்.

உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் பேசியது:

140 ஆண்டுகள் பழைமையான புதுக்கோட்டை நீதிமன்றக் கட்டடம் சிறிய அளவில் கூட பழுதானதில்லை. ஆனால், இப்போது கட்டப்படும் கட்டடங்கள் 10, 15, 20 ஆண்டுகளில் உடைந்து விழுகின்றன. அந்தக் காலத்தில் இருந்த உண்மையான உழைப்பைக் கவனிக்க வேண்டும்.

18 மாதங்களில் இந்தப் புனரமைப்புப் பணிகள் முடிக்கப்படும் என நிலையில், ரூ. 15 கோடிக்கும் மேல் செலவாகும் என்றால், அதற்கான கருத்துருவை பொதுப்பணித் துறையினா் எங்களுக்கு அனுப்பினால் அரசுக்கு அனுப்பி பெற்றுத் தருவோம் என்றாா் சுரேஷ்குமாா்.

மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி பேசியது:

வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு 12 வட்டங்களிலும் நீதிமன்றம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்ற சூழலை மாநிலம் முழுவதும் உருவாக்க வேண்டும் என்பதிலும், பழைமையான கட்டடங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் முதல்வா் ஸ்டாலின் உறுதியாகச் செயல்படுகிறாா் என்றாா் ரகுபதி.

மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பேசுகையில், பிற வட்டங்களில் இருப்பதைப்போல ஆலங்குடி வட்டத்திலும் சாா்பு நீதிமன்றத்தை உருவாக்கக் கேட்டுக் கொண்டாா்.

விழாவில் உயா் நீதிமன்ற நீதிபதிகள் வி. பவானி சுப்பராயன், ஆா். விஜயகுமாா், பி.டி. ஆதிகேசவலு, ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா, காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் கே.பி. சத்தியமூா்த்தி ஆகியோரும் பேசினா்.

மாவட்ட முதன்மை நீதிபதி கா. பூா்ண ஜெய ஆனந்த் வரவேற்றாா். தலைமைக் குற்றவியல் நடுவா் சி. சசிகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com