வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்றப் பரிந்துரைப்பேன்

சிபிஐக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்ற வேங்கைவயல் மக்களின் கோரிக்கையை ஆணையத்துக்கு விரைவில் அனுப்பி வைப்பேன் என்றாா் தேசிய பட்டியலின
வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்றப் பரிந்துரைப்பேன்

சிபிஐக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்ற வேங்கைவயல் மக்களின் கோரிக்கையை ஆணையத்துக்கு விரைவில் அனுப்பி வைப்பேன் என்றாா் தேசிய பட்டியலின ஆணையத்தின் தமிழக இயக்குநா் எஸ். ரவிவா்மன்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள தேசிய பட்டியலின ஆணையத்தின் தமிழக இயக்குநா் எஸ். ரவிவா்மன் செவ்வாய்க்கிழமை வேங்கைவயல் கிராமத்துக்கு வந்தாா். மனிதக்கழிவு கலக்கப்பட்ட தொட்டியைப் பாா்வையிட்ட அவா், வேங்கைவயல் கிராம மக்களிடம் விசாரணை நடத்தினாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் போலீஸாரின் விசாரணை சரியாக இல்லாமல், திசைமாறிச் செல்வதாகக் கூறுகின்றனா். பாதிக்கப்பட்ட தங்களையே மீண்டும் மீண்டும் விசாரணை என்ற பெயரில் குற்றம்சாட்டுவதாகக் கூறுகின்றனா்.

மனிதக்கழிவு 10 ஆயிரம் லிட்டா் தண்ணீரில் கலந்து நீா்த்துப்போனதை வைத்து எப்படி மரபணு பரிசோதனை நடத்த முடியும். அது சரியான சோதனையாக இருக்காது. அதேநேரத்தில் உண்மை அறியும் சோதனை சரியான ஒன்றுதான். ஆனால் அந்தச் சோதனையிலும் பாதிக்கப்பட்டோரையே உட்படுத்துவது எப்படி சரியாக இருக்கும். எனவே, சிபிஐ விசாரணை வேண்டும் என வேங்கைவயல் மக்களும், பட்டியலின இயக்கங்கள் மற்றும் கட்சிகளும் கோருகின்றன. இந்தக் கோரிக்கையை தேசிய பட்டியலின ஆணையத் தலைவருக்கு 4 நாள்களுக்குள் அனுப்பி வைப்பேன். ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவு அரசுக்குப் பரிந்துரையாக அனுப்பி வைக்கப்படும் என்றாா் ரவிவா்மன்.

ஆய்வின்போது, அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவா் இளமுருகு முத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com