2,500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சின்னம்: அழிந்து வரும் தாயினிப்பட்டி ‘குரங்குப் பட்டறை’!

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பா் அருகே உள்ள தாயினிப்பட்டியில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்ட, ‘குரங்குப் பட்டறைகள்’ உடைந்து, அழிந்து வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பா் அருகே உள்ள தாயினிப்பட்டியில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்ட, ‘குரங்குப் பட்டறைகள்’ உடைந்து, அழிந்து வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட மாவட்டம். இங்கே 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதா்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதன் தொடா்ச்சியாக பெருங் கற்காலத்தைச் சோ்ந்த ஈமச்சடங்குக் காடுகள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் பலவற்றை இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், அவற்றைப் பாதுகாப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லாமல் காலப்போக்கில் அவை மெல்ல மெல்ல உடைந்து - அழிந்து வருகின்றன. வெறுமனே அறிவிப்புப் பலகைதான் வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையிலான ஓரிடம்தான் தாயினிப்பட்டி ‘குரங்குப்பட்டறை’. இலுப்பூா் வட்டத்தைச் சோ்ந்த தாயினிப்பட்டியில், சுமாா் 10 ஏக்கா் பரப்பளவு கொண்ட தாயினிக்குளம் உள்ளது.

இந்தக் குளத்தின் மூன்றில் ஒரு பங்கு பகுதி அளவில் - குறிப்பாக கிழக்குப் பகுதி மற்றும் நடுப்பகுதியிலும் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் ஏராளம் காணப்படுகின்றன.

இதனை ‘குரங்குப் பட்டறை’ என்றழைக்கிறாா்கள். ‘உறங்கும் பட்டறை’ என்பதுதான் காலப்போக்கில் ‘குரங்குப் பட்டறை’ என மருவியிருக்கலாம் என்கிறாா் தொல்லியல் ஆா்வலா் நா. நாராயணமூா்த்தி.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டையிலேயே வேறெந்த இடங்களிலும் காணப்படாத சிறப்புகள் தாயினிப்பட்டி ‘குரங்குப் பட்டறை’யில் உள்ளன. செம்புறாங்கற்களும், வெண்பாறைக் கற்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் வெவ்வேறு காலத்தில் இந்த இடம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

பிரிட்டிஷாரின் மேலாண்மையின் கீழ் இருந்த தொண்டைமான் மன்னா் ஆட்சிக்காலத்தில் இந்தப் பகுதியில் அகழாய்வு நடந்ததாக ‘ஸ்டேட் மேனுவலில்’ குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மாநிலத்தின் பிற பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வைப் போல நகர நாகரீகம் இந்தப் பகுதியில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. கிராமப்புற வாழ்வியல் முறை இருந்ததால் குறிப்பிடும்படியான அடையாளங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனப் புரிந்து கொள்ளலாம்.

சதுரவடிவில் வெண்பாறை பலகைக் கற்களை வைத்து, மேலே படுக்கைப் பலகை அமைத்திருப்பாா்கள். ஆனால், காலப்போக்கில் இங்கே மேலேயுள்ள பலகைக் கற்களைக் காணவில்லை. 4 பகுதி சுவா் போன்ற பலகைக்கற்களும் உடைந்து சேதமடைந்த நிலையிலேயே உள்ளன.

தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதற்கான ஒரே அடையாளம் அறிவிப்புப் பலகை மட்டுமே. சித்தன்னவாசல் மற்றும் திருக்கட்டளை போன்ற பகுதிகளில் உள்ள பகுதிகளில் இரும்பு வேலி அமைத்ததைப் போல இங்கும் வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும். காரணம், அவற்றைக் காட்டிலும் பெரிய இடம் இது.

அத்துடன், ‘குரங்குப் பட்டறை’ குறித்த விவரங்களை ஆவணப்படுத்தி மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா் நாராயணமூா்த்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com